மேல்முடி ரங்கநாதர் கோவில்களுக்கு செல்ல வனத்துறை, பக்தர்களுக்கு கட்டுப்பாடு
பதிவு செய்த நாள்
02
அக் 2026 11:10
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் வட்டாரத்தில் உள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ரங்கநாதர் கோவில்களுக்கு செல்ல வனத்துறை, பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. கோவை வடக்கு பகுதியில், ஆண்டுதோறும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ரங்கநாதர் கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவு செல்வது வாடிக்கை. கடந்த வார புரட்டாசி மாத, 2ம் சனிக்கிழமை பெருமாள் முடிக்கு சென்ற சென்னை பக்தர் தொடர்ந்து மலை ஏற முடியாமல், அடிவாரம் திரும்பினார். பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு, அடிவாரத்திலேயே உயிரிழந்தார். மேல்முடி ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர், இரவு நேரத்தில் வழி தெரியாமல் வனவிலங்கு ஆபத்து உள்ள வனப் பகுதியில் வெகு நேரம் சுற்றித்திரிந்தார். பின்னர், 10க்கும் மேற்பட்ட வனத்துறையினரின் தேடுதல் வேட்டைக்கு பின்னர், அந்நபரை பத்திரமாக மீட்டு, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பக்தர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவதாகவும், இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் முடி மற்றும் மேல்முடி கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு கோவில்களும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால், வனப்பகுதியை பாதுகாத்தல், வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாத்தல் குப்பைகள் சேராமல் தடுத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் வனத்துறையினருக்கு ஏற்படுகின்றன. இதையொட்டி இவ்விரு கோயில்களுக்கும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் பெருமாள் முடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனை சாவடியை பயன்படுத்த வேண்டும். மேல்முடி செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனை சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்க படுவர். சின்னதடாகம் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது. மேல்முடி மற்றும் பெருமாள் முடி செல்லும் பக்தர்கள் காலை, 7.00 மணி முதல், 10.00 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் தரிசனம் முடிந்த பக்தர்கள் மாலை, 4.00 மணிக்குள் அந்தந்த சோதனை சாவடியை வந்தடைய வேண்டும். இனி வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் முடி கோவிலுக்கு அதிகபட்சம், ஆயிரம் எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாகனங்களில் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம், 250 மட்டுமே. மேலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேல்முடி கோவிலுக்கு அதிகபட்சம், 500 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம், 150 மட்டுமே. வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக ஒரு நபரிடம் இருந்து, 15 ரூபாய் பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும். சுகாதார துறையின் முறையான உடல் நல பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என, அதில் கூறப்பட்டுள்ளது.
|