திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு; 50,000 பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 04:10
கடலுார்: கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் மூன்றாம் சனிக்கிழமையையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் துவங்கினர். இரவு வரை 30,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 20,000 பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று காலை 3:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின், சிறப்பு பூஜைகள் முடிந்து 4:00 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவர் தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இன்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து கோவிந்தா; கோவிந்தா என கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.