எழுமலை: மழை வேண்டி எழுமலைப் பகுதி கிராமங்களில் பாறைகளில் கூழை ஊற்றி குடிப்பது, சோறு போட்டு சாப்பிடுவது என மக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர். பாறையில் உள்ள எஞ்சிய உணவை மழை பெய்து மழைநீர் கழுவிவிடும் என்ற ஐதீகம் இந்தப்பகுதி மக்களிடையே உள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை சூலப்புரம் அருகே சிறிய மலைகரட்டில் பெருமாள் கோயில் விளக்கு துாண் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வழிபாடு நடைபெறும். நேற்று மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வழிபாடு நடந்தது. விளக்குத்துாணில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பக்தர்களுக்கு பாறையில் அன்னதானம் நடைபெற்றது. பாறையில் சோறு, சாம்பார், ரசம், கூட்டு என பரிமாறினர். பக்தர்கள் உணவை சாப்பிட்டனர். மாலையே மழைபெய்து உணவு பரிமாறிய பகுதியில் இருந்த மீதங்களை கழுவிவிட்டது.