திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா வரும் நவ., 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவ., 24ல், அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படும். விழாவில் தினமும் காலை, மாலை, பஞ்ச மூர்திகள் வீதி உலா, 7ம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்க உள்ளது. விழாவின் பூர்வாங்க பணிகள் நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்றிரவு கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி., பிரவீன் குமார் அபிநாபு, வேலுார் டி.ஐ.ஜி., மகேஷ், எஸ்.பி., உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கோவில் முக்கிய பணியாளர்கள், கோவில் குருக்கள், கோவில் இணை ஆணையர் பரணிதரன், ஆகியோரிடம் திருவிழா முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ள விபரங்களை கேட்டறிந்தனர். மேலும், பக்தர்கள் தீப திருவிழாவின்போது அனுமதிக்கும் இடம், கோவிலினுள் உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழி, உள்ளிட்ட பல்வேறு விபரங்களை கேட்டறிந்தனர்.