பதிவு செய்த நாள்
12
அக்
2026
11:10
திருப்பூர்: திருப்பூர் முழுவதும் நவராத்திரி விழா களை கட்டியுள்ளது. கோவில்களில் கொலு பொம்மைகளுடன் அம்மன் வழிபாடு, வீடுகளில் சாமி சிலைகளுடன் வழிபாடு என நகரமே ஆன்மிக ஒளியில் மிளிர்கிறது.
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் 34வது நவராத்திரி கலை விழா துவங்கியுள்ளது. பிரேமா கல்வி நிறுவனங்கள், வடக்கு ரோட்டரி நவராத்திரி குழு, ஆதீஸ்வர் டிரஸ்ட், திருப்பூர் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்துகின்றன. தினமும் காலை 11:00 மணிக்கு விசாலாட்சியம்மன் அபிஷேக அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு உற்சவர் அலங்கார பூஜை, தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதேபோல் வீரராகவப்பெருமாள் கோவில், ஷெரீப் காலனி காமாட்சியம்மன் கோவில், பி.என். ரோடு சத்ய சாய் விஹார், ராக்கியாபாளையம் ராஜராஜேஸ்வரி கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், சின்னசாமி லே-அவுட் சித்தி விநாயகர் கோவில், குலாலர் மண்டபம் என பல இடங்களிலும் நவராத்திரி விழா கோலாகலமாக நடக்கிறது.
அவிநாசி ரோடு சிருங்கேரி சாரதாம்பாள் கோவில், புது ராமகிருஷ்ணபுரம் ராமலிங்க சவுண்டேஸ்வரி அம்மன் கோவிலில் 59ம் ஆண்டு விழா, வீரபாண்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா நேற்று துவங்கியுள்ளது. கொலு வழிபாட்டோடு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
தேவி மகாத்மியம்: சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூட மாணவ மாணவியரின் தேவி மகாத்மியம் பரதநாட்டிய நிகழ்ச்சி பிரித்வி இன்னர்வேர் வளாகத்தில் நேற்று நடந்தது. தொடர்ந்து அல்லாளபுரம் கரியகாளியம்மன் கோவில், பாளையக்காடு சக்திமாரியம்மன், அவிநாசி பேச்சியம்மன், கொங்குமெயின் ரோடு தாய்மதி விநாயகர், ஷெரீப் காலனி காமாட்சி அம்மன், சின்னக்கவுண்டன்பாளையம் மாகாளியம்மன், ஊத்துக்குளி கதித்தமலை கடம்பன் குடில், 19ம் தேதி வீரராகவப்பெருமாள் கோவில்களில் இந்த நாட்டிய நாடகம் நடக்கிறது. வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் நேற்று முதல் 19ம் தேதி வரை தினமும் பரதநாட்டியம் நடக்கிறது. 20ம் தேதி ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் 123 கலைஞர்கள் பங்கேற்கும் ஆண்டாளும் அவளுடைய பாசுரமாலையும் பிரமாண்ட நாட்டிய நாடகம் நடக்கிறது.
பக்தியில் ‘பூத்த’ கொலு: திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாகத் தொடங்கியது. வண்ணமயமான கொலு பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. கொலு பொம்மைகளின் அழகிய அணிவகுப்பு, நவராத்திரியின் தெய்வீகச் சிறப்பையும் பாரம்பரியப் பெருமையையும் பறைசாற்றியது. நவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், விசாலாட்சி அம்மன் மதுரை மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.