தடை மீறி ராமேஸ்வரம் கோயிலுக்குள் பக்தர்கள் செல்பி : பாதுகாப்பு கேள்விக்குறி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2026 03:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ எடுக்கின்றனர். இதனால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட,தென் மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இரு மாதம் முன்பு இக்கோயிலில் பிரசித்த பெற்ற 3ம் பிரகாரத்தில் இரு தம்பதிகள் நடனமாடி மொபைல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதனால் கோயிலின் புனிதம், கலாச்சாரம் சீரழிவதாக ஆன்மீக பெரியோர்கள் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செப்., 1 முதல் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மொபைல்போன் எடுத்து செல்ல தமிழக அரசு தடை விதித்தது. துவக்கத்தில் கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் மொபைல்போனை பக்தர்கள் எடுத்து வராதபடி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சில வாரங்களாக கண்டுகொள்ளாமல் விட்டதால், தற்போது கோயிலுக்குள் மொபைல்போனை பக்தர்கள் தாராளமாக எடுத்து சென்று கோயில் முதல் பிரகாரத்தில் செல்பி மற்றும் வீடியோ எடுக்கின்றனர். கோயிலில் 150க்கும் மேலான ஊழியர்கள் பணி புரிந்தும், மொபைல் போன் பயன்பாட்டை தடுப்பதில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது. இதனால் கோயிலின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.