மீன்கள் கழிவுகளால் மாசடைந்த திருப்புட்குழி பெருமாள் கோவில் ஜடாயு தீர்த்தம்
பதிவு செய்த நாள்
13
அக் 2026 12:10
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி கிராமத்தில் பழமையான விஜயராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில், ‘ஜடாயு தீர்த்தம்’ என அழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்கள் முன்னோருக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், நேற்று குளத்தில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: குளக்கரையில் முன்னோருக்கு திதி கொடுத்த பின், தயிர், பால், எள், தேன், தீப எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், குடிநீர் பாட்டில்கள், கேரிபேக்குகளை குளத்தில் வீசிச் செல்கின்றனர். அவற்றை கோவில் நிர்வாகம் முறையாக அகற்றுவதில்லை. இதனால், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எண்ணெய் படிவங்களால் நீர் மாசடைந்து, மீன்கள் இறந்திருக்கலாம். எனவே, குளத்தில் இறந்து கிடக்கும் மீன்களை உடனடியாக அகற்றுவதுடன், அவை இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், குளத்தை முறையாகத் -துாய்மைப்படுத்தி பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|