பதிவு செய்த நாள்
18
அக்
2026
01:10
உடுமலை: திருப்பூர் மாவட்டம், கொழுமம்- – கொமரலிங்கத்தில் சிதிலமடைந்த நிலையில், ‘ஆத்தோர வெங்கட்ராமர் கோயில்’ உள்ளது. இங்கு, பிற்காலத்தை சேர்ந்த அனுமார் சிலையை தவிர வைணவம் சார்ந்த அடையாளங்கள் இல்லாததால், இது ஒரு சிவன் கோவிலாக இருந்திருப்பதை, சிதைந்த நிலையில் காணப்படும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
கல்வெட்டுகள் இக்கோவில் சிவனை ‘காத்தாட் கொண்டார்’ என்று குறிப்பிடுகின்றன. கல்வெட்டுகள், 1909ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் படி எடுக்கப்பட்டு, பதிப்பிக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் அய்யப்பன், ஜீவா ஆகியோர் உதவியோடு இக்கோவிலை ஆய்வு செய்தனர். அப்போது, படி எடுக்காமல் விட்டு போன சில கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டு மிகவும் முக்கியமானதாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
சிதைந்து போன சிவன் கோவிலில், கொங்கு சோழர், வீரகேரளர் ஆகிய பண்டைய அரச வம்சத்தின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. புதிதாக கிடைத்த இந்த கல்வெட்டு, கொங்குச் சோழ மன்னர் விக்கிரம சோழர் ஆட்சிக்காலத்தில், கோவில் முன் மண்டப தென்பகுதியில், மூன்று வரிகளில் காணப்படுகிறது.
இக்கல்வெட்டை 13ம் நுாற்றாண்டில், சிவபிராமணர் பொறிப்பித்திருக்கிறார். கல்வெட்டை பொறிப்பித்தவர் ‘உடையான் சோபநாதேவன் ஆதிசைவச்சக்கரவர்த்தி’ என்பவர் எனவும், அவர் அக்கோவிலின் காணி உடைய பிராமணர் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
கொங்கு சோழர்களின் ஆட்சியில் நிலவிய ‘சீயக்கி பழஞ்சலாகை அச்சு’ எனும் காசை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அதோடு, நித்தம் ஒருநாழி அரிசிச்சோறு ‘பொதிச் சோறாக’ ஒரு சட்டியில் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்படுவது, தற்போதைய தக்காளிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சோறு போன்ற சிற்றன்னத்தை குறிப்பதாகும்.
பெருவழிகளில் செல்லும் வழிப்போக்கர்களுக்கும், நெடுந்தொலைவு பயணம் செய்வோருக்கும் இவ்வாறான பொதிச்சோறு அளிப்பது, அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. கேரளத்தில் தற்போதும் இது ‘பொதிச்சோறு’ என்றே அழைக்கப்படுகிறது.
சிதைந்து போன இச்சிவன் கோவில், மதுரையில் இருந்து ரோமாபுரி சென்ற பண்டைய, கொழுமம் பெருவழிப்பாதையில் அமைந்திருப்பதாலும், பயண களைப்போடும் பசியோடும் வரும் வழிப்போக்கர்களுக்கு பொதிச்சோறு உதவும் என்பதாலும், இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்.
‘அன்னதானம்’ என்பதற்கான உண்மையான பொருளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.