பதிவு செய்த நாள்
11
பிப்
2013
10:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் புடைசூழ குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில்ஆண்டு தோறும் தை மாத அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்குவது வழக்கம்.இந்த ஆண்டு கொடியேற்றத்துக்காக ஆனைமலை பகுதியிலிருந்து 80 அடி உயரமுள்ள மூங்கில் வெட்டி தோளில் பக்தர்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது.உப்பாற்றில் கொடிமரத்தை நீராட்டி வஸ்திரம், மலர், சந்தனம், குங்குமம் இட்டு சிம்மக்கொடி ஏற்றி வழிபட்டனர். இதற்கான பூஜை முடிந்தவுடன், காப்புக்கட்டி மேள தாளங்களுடன் ஆனைமலையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களால் எடுத்து செல்லப்பட்டு கோவில் வளாகத்துக்கு நேற்று காலை 10.00 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
காலை 11.00 மணிக்கு கோவில் முன்பு கொடிமரம் நிலைநிறுத்தி, கொடியேற்றப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், வேளாண் அமைச்சர் தாமோதரன், துணை சபாநாயகர் ஜெயராமன் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.அப்போது, "மாசாணித்தாயே என்று கோஷம் எழுப்பி பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், எம்.பி.சுகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், முத்துகருப்பண்ணசாமி, மேயர் வேலுச்சாமி, மாசாணியம்மன் கோவில் தக்கார் குமரதுரை, கோவில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சேகர், ஆனைமலை பேரரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரிவாசு, மாசாணியம்மன் நற்பணிமன்றத்தினர், முறைதாரர்கள், விழாக்குழுவினர் பங்கேற்றனர்.குண்டம் விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும் 28ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அமைச்சர்களுக்காக காத்திருந்த கொடிமரம்: காலை 10.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 10.10 மணிக்கு துணை சபாநாயகர் ஜெயராமன், மேயர் வேலுச்சாமி ஆகியோர் வந்தனர். அதேசமயத்தில் கொடிமரமும் கோவில் வளாகத்தினுள் வந்தது. கொடி மரம் நிலைநிறுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் அமைச்சர் ஆனந்தனும்; தாமோதரனும் வர தாமதமானதால் கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் வெயிலில் காத்திருந்தனர். காலை 11.00 மணிக்கு இரு அமைச்சர்களும் வந்த பிறகு 11.05 மணிக்கு கொடி மரம் நிலைநிறுத்தப்பட்டது. கூட்டத்தில் இருந்த பக்தர்கள், "தெய்வத்திற்காக மனிதன் காத்திருந்த நிலை மாறி அமைச்சர்களுக்காக தெய்வம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று கூறினர்.