ராஜராஜசோழன் இலங்கை நோக்கி போரிட செல்லும் முன், இந்த கோவிலில் தங்கி, இலங்கையின் படை பலத்தை அறிந்ததாகவும், வெள்ளுர் கண்மாய் பகுதியை பதுங்கு குழிகளாக்கி, படை கலன்கள் வைப்பதற்கு அரண் போல பயன்படுத்தியதாகவும் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. கோவிலின் கருவறை, தஞ்சாவூர் பெரிய கோவிலின் கருவறை விமான உள்கூடு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. இக்கோவில், போதிய பராமரிப்பின்றி சிதிமலடைந்துள்ளது. கோவிலை சுற்றி இப்போது செடி, கொடிகள் மண்டியுள்ளன. பக்தர்கள் கருடாழ்வார், கருப்பர் சுவாமியை தரிசித்து உள்ளே சென்று பெருமாளை தரிசிக்க முடியாத அளவுக்கு, அர்த்த மண்டபம் இடிந்து விழுந்து, பாதை மூடியுள்ளது. லட்சுமிநாராயணன், பெருமாள் உட்பட சிற்பங்கள் மீது, சுவர் இடிந்து விழுந்து மூடியுள்ளது. ராஜராஜசோழன் கட்டிய இந்த கோவிலை, புனரமைத்து பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.