பாரம்பரிய உணவு முறைகள், பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் நோயின்றி வாழலாம்- தருமபுரம் ஆதீனம் அருளாசி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2026 11:10
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 26 வது குருமஹா சன்னிதானம் நூற்றாண்டு விழா, தருமபுரம் ஆதீனம் ஆயுஷ் மருத்துவம் மற்றும் கல்வி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் தன்வந்திரி யாகத்துடன் கூடிய பியூஷதாரா 2026 தேசிய கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நேற்று ஆதீன கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் விழா மலரை வெளியிட்டு ஆசி வழங்கி பேசுகையில்: சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத முறைகள் நம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியாகவே இருந்துள்ளன. இயற்கை வழியிலான உணவும் சத்தான வாழ்வியல் முறைகளும் நோயற்ற வாழ்க்கைக்கு அடிப்படையாகும். பாரம்பரிய உணவு முறைகள் பழக்க வழக்கங்களை கடைபிடித்தால் நோய் இன்றி வாழலாம். தற்காலத்தில் காய்கறிகள் மற்றும் உணவு பயிர்களில் அதிக அளவில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதாலும் உணவு முறை மாற்றங்களாலும் பல்வேறு நோய் மற்றும் உடல்நல பாதிப்புகள் அதிகரிக்கின்றன. அவசர வாழ்க்கை முறை மற்றும் செயற்கை தன்மையால் உடலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. அலோபதி முறை அவசரகால சிகிச்சைகளுக்கு உடனடி நிவாரணம் அளித்தாலும் சித்த மருத்துவம் நோய்க்கான மூல காரணத்தை வேரோடு நீக்கி முழுமையான குணமளிக்கும் ஆற்றல் கொண்டது. பக்க விளைவுகள் அற்ற இயற்கை முறையே உடலுக்கு நீடித்த நன்மையை அளிக்கும். நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது கிராமங்களின் வளர்ச்சியிலேயே அடங்கியுள்ளது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதிகள் சென்றடைவது மிகவும் அவசியம். அதற்காக தருமபுரத்தில் மருத்துவ முகாம்கள் மற்றும் கல்விப் பணிகள் முன்னெடுத்து வருகின்றோம் என்றார். சென்னை தன்வந்திரி ஆரோக்கிய பீடம் முரளிதர சுவாமிகள், டாக்டர்கள் ராஜசேகர், செல்வம், சுகுமார், அருண் பிரசாத், ஆயுஷ் மருத்துவமனை செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் வரவேற்றார்.