பதிவு செய்த நாள்
06
நவ
2026
11:11
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், நாசிக் நகரில் உள்ள மடத்தின் கிளைக்கு விஜயம் செய்தார்.
வனவாசம் சென்ற ராமபிரான், அகஸ்திய மகரிஷியின் ஆசியுடன் பஞ்சவடியில் ஆசிரமம் அமைத்து, சீதா மற்றும் லட்சுமணருடன் வசித்தார். சிருங்கேரி ஜகத்குருக்களில் இருவர் அங்கு வாசம் செய்து முக்தியடைந்ததால், அப்பகுதி தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. மகான்களின் அதிஷ்டானங்களும் நாசிக் மடத்தில் அமைந்துள்ளன.
சிருங்கேரி குரு பரம்பரையில் 28வது குருவான ஸ்ரீஅபிநவ சச்சிதானந்த பாரதி (1741–1767) காலத்தில், பாலாஜி பாஜிராவ் பிரதான் பூனாவில் பேஷ்வாவாக இருந்தார். அவர் ஸ்ரீசாரதாம்பாளுக்கும் சுவாமிகளுக்கும் பல உயர்ந்த வெகுமதிகளை அனுப்பி வைத்தார். அவருக்குப் பின், பேஷ்வா மாதவராவ் பிரதான், ஜகத்குருவின் அக்ரபூஜைக்கான வருடாந்திர நிதிக்கு ஏற்பாடு செய்தார். ஸ்ரீஅபிநவ சச்சிதானந்தர், 1760–61ல் பூனாவுக்குச் சென்றார். அங்கிருந்து நாசிக் சென்று, 1767ல் முக்தியடைந்தார்.
அதன்பின், 6வது நிரசிம்ம பாரதி (1767–1770) ஜகத்குருவானார். நாசிக்கில் வாழ்ந்து வந்த அவர், 1770ல் முக்தியடைந்தார். கடந்த 1760 முதல் 1770 வரை, சிருங்கேரி ஜகத்குருக்களின் கேந்திர ஸ்தானமாக நாசிக் விளங்கியது. பேஷ்வா மாதவராவ், மடத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார். இரண்டாவது பாஜிராவ் பேஷ்வா, அனைத்து சமயக் கூட்டங்களிலும் சிருங்கேரி பீடத்துக்கு முதல் பூஜை செய்ய வேண்டுமென உத்தரவிட்டதுடன், தான் சிருங்கேரி மடத்தின் சீடர் என்றும் அறிவித்தார்.
நாசிக்கில் உள்ள சிருங்கேரி மடம், 250 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பது, 1805ல் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட அறிக்கை வாயிலாகத் தெரியவருகிறது. சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் தற்போதைய ஜகத்குரு ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள், 2007ல் நாசிக் மடத்தில் ஸ்ரீசாரதாம்பாள் மற்றும் ஆதி சங்கரர் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீமடத்தின் நாசிக் கிளைக்கு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் விஜயம் செய்து, அதிஷ்டானங்களிலும், ஸ்ரீசாரதாம்பாள் மற்றும் ஆதி சங்கரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இதனை தொடர்ந்து, மஹாராஷ்டிரா விஜய யாத்திரையை நிறைவு செய்த சுவாமிகள், சிருங்கேரி சென்றடைந்தார்.