பதிவு செய்த நாள்
12
பிப்
2013
11:02
பேரூர்: பேரூர் கோவில் தேரோட்டம் மதியம் 3.15 மணிக்கு நடத்தப்படும்,என, ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. பல நூற்றாண்டுகளாக, பேரூர் கோவில் தேர் எப்போதும் இரவு 8.00 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. பெரும்பாலான சமயம் மறுநாள் அதிகாலை தேர்நிலை சேர்வதும், ஒரு சில சமயங்களில் தேர் நிலை சேராமல் ரோட்டோரத்தில் இறங்கிவிடுவதால், தேர்நிலை சேர்வதில் சிக்கல் இருந்தது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்படும் போது, ரோட்டோரத்தில் இருபுறமும் பக்தர்களின் நெரிசலுக்கு மத்தியில் தேரை வடம் பிடித்து இழுப்பதிலும் சிரமம் நிலவுகிறது. கோவை உள்பட பல்வேறு முக்கிய கோவில்களில் இரவு நேரங்களில் இழுக்கப்பட்ட தேர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை தவிர்க்கும் வகையிலும், கோவில் நிர்வாக வசதிக்காகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும் காலங்களில் பகலில் தேர் இழுக்கப்படுமென, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வரும் மார்ச் 23ம் தேதி தேரோட்டம் நடக்கவுள்ளது. இதையடுத்து, பகலில் தேரோட்டம் நடத்தப்படுவது குறித்தும், ரோட்டோரமுள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், பேரூர் கோவிலில் அதிகாரி குமரதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில், பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகள், சிவபக்தர்கள் நலச்சங்கத்தினர், இந்துமுன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், இனிவரும் காலங்களில் மதியம் 3.15 மணிக்கு கோவில் தேரோட்டம் நடத்தப்படுவதெனவும், அதற்கு முன்பாக ரதவீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.