பதிவு செய்த நாள்
15
நவ
2026
02:11
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் – விசாலாட்சி அம்மன் கோவில் மற்றும் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டான கும்பாபிஷேகம் அக்., 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சிருங்கேரி மடத்தின் சார்பில் கோவில் திருப்பணிகளும், பூஜைக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், காவிரி ஆற்றிலிருந்து, 1.50 கி.மீ., தொலைவுக்கு குழாய்கள் பதித்து, கோவிலுக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நீரில் தான் நித்ய அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு அருளாசியுடன், மடத்தின் சார்பில் நெரூர் கிளை தர்மாதிகாரி ஸ்ரீதர் சிட்யாலா, சாரதா சிட்யாலா மற்றும் உபயதாரர்கள் இணைந்து கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
விழா உபயதாரர் ஸ்ரீதர் சிட்யாலா கூறியதாவது:
அத்வைத வேதாந்த தத்துவத்தின் துாதுவரை போன்று ஸ்ரீசதாசிவ பிரமேந்திரர் உபதேசங்களை வழங்கியுள்ளார். சிருங்கேரி பீடத்தின் 33வது பீடாதிபதி, கரூரிலிருந்து திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் க்ஷேத்திரங்களுக்கு பயணம் மேற்கொண்டபோது, நெரூர் அருகே பிரமேந்திரர் சமாதியை கண்டறிந்து, உலக மக்களுக்கு மஹானின் அருள் கிடைக்க வழிவகுத்தார். அவரது பிரமேந்திர ஸ்தவம், மஹானின் சரித்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை விளக்குகிறது.
அதிஷ்டானத்தையும், பிரமேந்திரரின் மகிமையையும் உலகிற்கு உணர்த்தும் வகையில், ஒவ்வொரு சிருங்கேரி சங்கராச்சார்யரும் கரூர் வரும்போது, நெரூருக்கு சென்று, உலக நன்மைக்காக பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
மனித வாழ்க்கையின் உயர்நிலையை நாடுபவர்கள் அனைவரும் ஸ்ரீபிரமேந்திரரை குருநாதராக கொண்டு பயன் பெற்று வருகின்றனர். மண்டல பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காசி விஸ்வநாதரையும், ஸ்ரீசதாசிவ பிரமேந்திரரையும் வழிபட்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.