பதிவு செய்த நாள்
13
பிப்
2013
11:02
சிவகங்கை: சிவகங்கை, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், பிப்., 25 ல், மாசித் தெப்ப உற்சவம் நடக்கிறது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில், வைணவ திருத்தலங்களில் முக்கியமானது; ராமனுஜர் பாடல் பெற்ற தலம். மாசி மாதம் நடக்கும் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றது.தெப்ப உற்சவம்:தெப்பத்திருவிழா, பிப்., 16 காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 7.30 காப்பு கட்டப்படும். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் இருந்து தினமும், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவீதி உலா வருவார். ஆறாம் நாளான, பிப்., 21 மாலை, தங்க பல்லக்கில் ஆண்டாள் சன்னதியில் சுவாமி எழுந்தருள்வார். பிப்., 25 காலை தெப்ப உற்சவம் நடக்கும். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், காலை ஒருமுறையும், இரவு 11 மணிக்கு, மூன்று முறையும் சுவாமி வலம் வருவார்.அகல் விளக்கு நேர்த்தி:நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி, தெப்பத்தில் எரிந்து முடியும் அகல்விளக்குகளை, மஞ்சள் துணியில் கட்டி பக்தர்கள் எடுத்துச் செல்வர். வேண்டுதல் நிறைவேறியவர்கள்,புதியதாக இரு மடங்கு விளக்குகளை வாங்கி ஏற்றி, சுவாமிக்கு நன்றி செலுத்துவர். தெப்பத்தில் விளக்கு ஏற்றுவதின் மூலம், திருமண தடை நீங்கும்; குழந்தைப் பேறு உட்பட நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதனால், விளக்கு எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள், திருக்கோஷ்டியூர் வருவர். பிப்.,26 காலை 10 மணிக்கு பெருமாள் தீர்த்தவாரி உற்சவத்துடன், விழா நிறைவு பெறும்.