பொக்காபுரம் திருவிழா: மசினியம்மன் கோவிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2013 11:02
ஊட்டி: பொக்காபுரம் தேர்த்திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு, மசினகுடி மசினியம்மன் கோவிலில் வரும் 16,17ம் தேதிகளில் இரண்டு நாள் தொடர் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழாவில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மசினகுடியில் உள்ள மசினியம்மன் கோவிலில் விரதம் இருந்து கரகம் ஜோடித்து பக்திபரவசத்துடன் தலையில் சுமந்து வருகின்றனர். பல நூற்றாண்டு காலமாக நடந்து வரும் 2 நாள் கரக புறப்பாடு நிகழ்ச்சியின்போது, ஊட்டி நீலாம்பிகை சேவா சங்கத்தின் சார்பில், மசினியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொக்காபுரம் தேர்த்திருவிழா வரும் 15ம் தேதி நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை நடக்கும் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த, மசினகுடி மசினியம்மன் கோவிலில் கரக புறப்பாடுக்கு தயாராகுவர். இங்கு சேவா சங்கத்தின் சார்பில், 13வது ஆண்டு, இரண்டு நாள் தொடர் அன்னதானம் நடத்தப்படுகிறது. இதேபோல, ஊட்டி அன்னதானி காபிஒர்க்ஸ் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக காபி வழங்கப்படுகிறது. 18ம் தேதியன்று பொக்காபுரம் மாரியம்மன் தேர்த்திருவிழாவில் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவா சங்க பந்தலில் காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நீலாம்பிகை சேவா சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.