திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 14 கி.மீ தொலைவு கொண்ட புனித கிரிவலப் பாதையில் வலம் வந்து வழிபட்டு வருகின்றனர். 2,668 அடி உயர மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 15ல், தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவில், இன்று, 24ல், பஞ்ச பூதங்கள் ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் விக்னேஷ் சிவாச்சாரியார் கையில் ஏந்தி, பரணிதீபம் மடக்கில், ஜோதி ரூபமாய் வெளிபிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.