பதிவு செய்த நாள்
24
நவ
2026
01:11
விளக்கேற்றினால் வீடு தேடி வருவார்: திருவண்ணாமலையில் மலைதீபம் ஏற்றும்போது பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்று கோஷமிடுவர். நாம் வீட்டில் விளக்கேற்றும் போதும், அண்ணாமலையை மனதில் சிந்தித்தபடி விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கு குறித்த பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். கார்த்திகை பொரி உருண்டை, பிடி கொழுக்கட்டை, பழம், கல்கண்டு, பால் நிவேதனம் செய்யலாம். இம்முறையில் வழிபட்டால் அண்ணாமலையார் நம் வீட்டுபூஜைக்கு எழுந்தருள்வார்.
கார்த்திகை விளக்கு திருவிழா தமிழர்களின் சிறப்பான வழிபாடுகளில் ஒன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீப வழிபாட்டிற்கு அகல் விளக்குகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளின் வாசலில் விளக்கேற்றி வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத்தின் முதல்நாள் ஏற்றப்படும் தீபம் பரணி தீபமாகும். இது முருகனுக்குரிய வழிபாடு. மறுநாள் திருக்கார்த்திகை தீபம் சிவனுக்காக ஏற்றப்படுகிறது. கார்த்திகை மாத வளர்பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்று விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபடுவதே முறையான வழிபாடாகும். மாலை மாவிளக்கு ஏற்றி அந்த விளக்கிற்கு பூஜை செய்து அதன்பிறகே உணவு உண்ண வேண்டும். கார்த்திகை அன்று பகலில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். கார்த்திகை அன்று மாலையில் வீட்டிலிருக்கும் எல்லா விளக்குகளையும் ஏற்ற வேண்டும். வாசலில் சிறு விளக்குகளை ஏற்றிவைக்க வேண்டும். இந்த தீபச்சுடர்கள் எங்கும் பிரகாசிப்பதைக் காணும்போது மகிழ்ச்சி பெருகுவதுடன் பக்தியும் சுரக்கும்.
கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார். திரிபுரதகனத்தின் போது, சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது என்கிறது
சிவமகாபுராணம்: தீபம் என்பது லட்சுமி தேவியின் வடித்தையும், சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், பார்வதியின் சக்தியையும் ஒன்றாக சேர்த்திருப்பது. எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி எய்தும் என்பது ஆன்றோர் மொழி. எனவே தான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.எனவே கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
கார்த்திகை திருவிளக்கு பூஜை: கார்த்திகையன்று வீட்டிலோ அல்லது கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். எல்லா இடங்களிலும் இருக்கும் இறைவனை நம் இல்லத்திலோ, ஊரிலோ எழுந்தருளச் செய்வதே விளக்கு வழிபாடு. ஆதியில் வேதரிஷிகள் ஹோமம் செய்து இறைவனை வழிபட்டனர். அப்போது, யாககுண்டங்களில் அக்னி எரியும். இதுவே எளிமையாக்கப்பட்டு தீப வழிபாடாக மாறியது. விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. பூஜையறையில் வாசலில் மாக்கோலம் இட்டு, அதன் மத்தியில் விளக்கை ஏற்றிவைத்து, அதனை வீட்டு பூஜையறைக்குள் கொண்டு வந்து வைத்தால் விளக்குடன் மகாலட்சுமியும் இல்லத்திற்குள் வருவாள் என்பது ஐதீகம்.
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம் சிவாம்சமாகும். யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன். ஆனால், நம் மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை. சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது, ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார். அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறிகள் கிளம்பின. ஆறுதீப்பொறிகளும் சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன. அதுபோல,பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறுஅகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது. வீடுகளில், கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்க வேண்டும். வீடு முமுதும் நடசத்திர அடிப்படையில் 27 தீபம் மற்றம் அதற்கு மேலும் ஒற்றை படையில் வரும்படி ஏற்றலாம். அண்ணாமலை தீபம் வேறு, நம் வீட்டு அகல்தீபம் வேறு என நினைக்க வேண்டாம். இரண்டும் ஒன்றே.