பதிவு செய்த நாள்
25
நவ
2026
01:11
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, தாடகை நாச்சியம்மன் மலைக்கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்ததால், பக்தர்கள் அதிகளவு சென்று தரிசனம் செய்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட, அடர்ந்த வனப்பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து, 5ஆயிரம் அடி உயரத்தில் தாடகை நாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்குகிறது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பாண்டு மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், மலையேறி அம்மனை தரிசனம் செய்ய வனத்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
மேலும், பரிசோதனை, முன் அனுமதி பெற்ற நபர்களை மட்டுமே வனத்துறையினர் சோதனை செய்து அனுமதித்தனர். ஆதார் அட்டை பரிசோதனை செய்து அனுமதி அளிக்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேலும், பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்; பாலித்தீன் கவர், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது, வனவிலங்குகளை கண்டால் அவைகளை துன்புறுத்துவதோ, அருகில் சென்று புகைப்படங்கள் எடுக்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தினர்.
வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை மகாதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூறுகையில், ‘அங்கலகுறிச்சி அருகே, தாடகை நாச்சியம்மன் மலைக்கோவில் பிரசித்தி பெற்றதாகும். ராமர் வந்து சென்றதற்காக, ராமர் பாதம் உள்ளது. சித்தர்கள் தவம் செய்த இடமாக உள்ளது. இங்கு மகாதீபம் தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது,’ என்றனர்.