திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை அளித்த சென்னை தொழிலதிபர்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2026 12:11
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். சுமார் ரூ.161 கோடி மதிப்பிலான இந்த நகைகள், 15 மாத கால உழைப்பில் பாரம்பரிய ஆகம விதிமுறைகளின்படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னையைச் சேர்ந்த வர்த்தகத் தொழிலதிபர் வர்தமான் ஜெயின் என்பவர் இந்த நகைகளைக் காணிக்கையாக வழங்குகிறார். மொத்தம் 40 வகையான ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு முன்னிலையில், இந்த நகைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் அவர் ஒப்படைக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏழுமலையானுக்காக மொத்தம் 9 தொகுப்புகளாக இந்தத் தங்க ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. திறமையான கைவினைக் கலைஞர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர், பாரம்பரிய ஆகம சாஸ்திர விதிமுறைகளைப் பின்பற்றி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இவற்றை உருவாக்கியுள்ளனர். இதில் கிரீடம், பத்ம பாதங்கள், இடுப்புப் பட்டை, தோளில் அணியும் ஆபரணங்கள், சங்கு, சக்கரச் சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நகைகள் இடம்பெற்றுள்ளன.
ரங்கநாயக மண்டபத்தில் காட்சிக்கு வைப்பு: தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படும் இந்த நகைகள், திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு ஏழுமலையானுக்கு இந்தப் புதிய ஆபரணங்கள் அணிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏழுமலையான் கோயிலில் சுமார் 10 டன் அளவுக்கு தங்க இருப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்படுவது பக்தர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.