ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில் மகதை இளவரசன் சிற்பம் கண்டெடுப்பு
பதிவு செய்த நாள்
27
நவ 2026 10:11
சேலம் மாவட்டம், ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில், மகதை நாட்டு இளவரசர், இளவரசியின் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆத்துார் ஒன்றியம், ஆறகழூரை தலைமை இடமாக கொண்டு, மகதை நாட்டை ஆட்சி செய்தவர்கள் வாணகோவரையர்கள். சோழர் ஆட்சியில், குறுநில மன்னர்களாக செயல்பட்ட இவர்களின் சிறப்புகள், இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் சிவானந்தம், ஆறகழூர் திருக்காமநாதீஸ்வரர் கோவிலில் சமீபத்தில் கள ஆய்வு நடத்தி, இளவரசர், இளவரசியின் சிற்பங்களை அடையாளம் கண்டுள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: கோவிலின் முதல் சுற்றில் உள்ள வடக்கு திருமாளிகை துாண் ஒன்றில், கைகூப்பி வணங்கிய நிலையில் ஆண் உருவப் புடைப்பு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அதன் மேல், ‘பிள்ளையார்’ என எழுதப்பட்டுள்ளது. பிள்ளையார் என்பது, இளவரசரைக் குறிக்கும் சொல் என்பதால், இது மகதை இளவரசரின் சிற்பம் என்பதை உறுதி செய்யலாம். மேலும், இந்த துாணுக்கு அருகிலேயே, கைகூப்பிய நிலையில், பெண் சிற்பம் உள்ளது, அது, இளவரசியை குறிக்கும். சோழர்கள் வலிமை பெற்ற போது, அவர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாக, மகதை மண்டல அரசர்களான வாணகோவரையர்கள் இருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன் ஆண்ட, 13ம் நுாற்றாண்டில், ராசராசதேவன் பொன்பரப்பின வாணகோவரையர், குலோத்துங்கசோழ வாணகோவரையர் ஆகியோர் இணைந்து, மகதை நாட்டை ஆட்சி செய்தனர். திருவண்ணாமலை கோவிலுக்கு பொன் வேய்ந்ததால், ‘பொன்பரப்பின் வாணகோவரையர்’ என்ற பெயர் பெற்றார். தற்போது கண்டறியப்பட்டுள்ள மகதை நாட்டு இளவரசன் சிற்பம், வாணகோவரையர்களின் வரலாற்றுக்கும், தமிழகத்தின் ‘மிலாடு’ எனும் நடுநாட்டின் வரலாற்றுக்கும் முக்கிய சான்றாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். – நமது நிருபர் –:
|