பதிவு செய்த நாள்
14
பிப்
2013
11:02
காஞ்சிபுரம்: கோவில் நகரம் என, பெருமை பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நந்தன ஆண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை, 15ம் தேதி துவங்குகிறது. இம்மாதம், 27ம் தேதி வரை இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முதல் சோழர்களால், சங்க காலத்தில் எடுப்பிக்கப்பட்ட இக்கோவிலில், கரிகால்வளவன் வழிபட்ட பின்னரே, தன் படையெடுப்புக்களை துவக்கி உள்ளான் என, வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் உள்ள கல்வெட்டில், கி.பி. 725ல், இரண்டாம் நரசிம்ம பல்லவனின் மனைவியான, லோகமாதேவி, பிரம்ம ராட்சஷனால் பிடிக்கப்பட்டு, மகிழம்பள்ளி ஆச்சாரியாரால் நலம் பெற்ற குறிப்பு காணப்படுகிறது. காஞ்சியை ஆண்ட அனைத்து வேந்தர்களாலும், மக்களாலும் முதலிடத்தில் வைத்து சிறப்பிக்கப்பட்ட காமாட்சியம்மன் கோவிலில், சரித்திரம் கூறும், 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில், கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள், விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. சக்தி பீடங்கள் 64ல், இது ஆதீ பீடமாகும். பண்டன் என்ற அசுரன் சிறுமியைத் தவிர வேறு யாராலும் அழிவு ஏற்படக்கூடாது என, வரம் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர். அம்பிகை, சிறுமியாக உருமாறி அசுரனை அழித்தாள். தேவர்கள் வேண்டுதலுக்காக, காஞ்சிபுரத்தில் அம்பிகை எழுந்தருளினாள். பக்தர்களின் விருப்பங்களை(காமம்) அருளும் கருணைக் கண் கொண்டவள் (ஆட்சி-கண்) என்பதால் "காமாட்சி எனப் பெயர் பெற்றாள். முப்பெரும் தேவியரின் அம்சமாக காமாட்சி அருளுகிறாள். "கா என்பது மகாலட்சுமியையும், "மா சரஸ்வதியையும் குறிக்கும். உற்சவ அம்பிகையுடன் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரம்மனால் ஏற்படுத்தப்பட்ட உத்சவமே, பிரம்மோற்சவம். இந்நாட்களில், அம்மன், உற்சவராக, பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.