திருவனந்தபுரம்: கேரளாவில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா வரும் 18ம் தேதி துவங்குகிறது. 26ம் தேதி பிரசித்தி பெற்ற பொங்காலை நடக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்திருக்கும் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் உலக பிரசித்திபெற்றதாகும். இங்கு நடக்கும் பொங்கல் விழா அதிக பெண்கள் ஒரே இடத்தில் கூடும் விழா என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 1997ம் ஆண்டு 15 லட்சம் பெண்கள் பங்குபெற்றதாக கின்னஸ் புத்தகத்தில் பெயர் வந்தது. 2009ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பங்கெடுத்து கின்னஸ் ரெக்கார்டு மாற்றியமைக்கப்பட்டது. இந்த ஆண்டின் பொங்கல் விழா வரும் 18ம் தேதி காப்புகட்டி அம்மனை குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தினசரி கோயிலில் கண்ணகி சரிதம் பாடப்படும். இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகளை நடிகை சீமா துவங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாடகர் யேசுதாசிற்கு "ஆற்றுகால் அம்பா விருது வழங்கப்படுகிறது. அம்பா பிரசாதம் பொங்கல் சிறப்பு மலர் நடிகை விதுபாலாவிற்கு வழங்கி வெளியிடப்படும். நிகழ்ச்சியில் நடிகர் நெடுமுடிவேணு பங்கேற்கிறார்.19ம் தேதி டாக்டர் பத்மாசுப்பிரமணியத்தின் பரதநாட்டியம், 20ம் தேதி எம்.எஸ்.விஸ்வநாதனின் நிகழ்ச்சி. 21ம் தேதி நடிகை ஆஷா சரத்தின் நடனம், 24ம் தேதி சங்கீத கச்சேரி, 26ம் தேதி கதகளி ஆகியன நடக்கிறது.ஒன்பதாம் நாளான 28ம் தேதி பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. கண்ணகி சரிதத்தில் பாண்டிய மன்னன் இறக்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதி பாடி முடித்ததும் 10.45 மணிக்கு கோயிலில் இருந்து தந்திரி தீபம் ஏற்றி மேல்சாந்தியிடம் ஒப்படைப்பார். மேல்சாந்தி கோயில் சார்பில் வைக்கப்பட்டுள்ள பொங்காலை அடுப்பில் தீ ஏற்றுவார். அங்கிருந்து தீபம் பெற்றுகோயில் முன் வைக்கப்பட்டிருக்கும் பண்டார அடுப்பில் தீ வைக்கப்படும். பின்னர் எல்லா பொங்காலை அடுப்புகளுக்கும் தீ ஏற்றப்படும்.கடந்த ஆண்டைவிட அதிக பெண்கள் இந்த ஆண்டு பொங்கல் இட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும் அரசும் இணைந்து செய்து வருகின்றனர்.