பதிவு செய்த நாள்
18
பிப்
2013
10:02
சபரிமலை: மாசி மாத பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நேற்றிரவு அடைக்கப்பட்டது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் மாத பூஜைகளுக்காகவும், உற்சவ நிகழ்ச்சிகளுக்காகவும், நடை திறக்கப்படுவது வழக்கம்.மாசி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை, 12ம் தேதி மாலை திறக்கப்பட்டு, மறுநாள் காலை கணபதி ஹோமத்துடன், வழக்கமான மற்றும் சிறப்பு பூஜைகள் துவங்கின.பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, நேற்றிரவு, 10:00 மணிக்கு, சுவாமிக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு, ஜபமாலை அணிவித்து, ஹரிவராசனம் பாடல் பாடி, நடை அடைக்கப்பட்டது. பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர உற்சவத்திற்காக, கோவில் நடை, அடுத்த மாதம், 14ம் தேதி, மாலை திறக்கப்படும். உத்திர நிகழ்ச்சிக்கான கொடியேற்றம், 17ம் தேதி நடைபெறும். உத்திர உற்சவம் மற்றும் ஆராட்டு வைபவம், 27ம் தேதி நடைபெறும். அதன்பின், அன்றிரவே, கோவில் நடை அடைக்கப்படும்.