பதிவு செய்த நாள்
19
பிப்
2013
10:02
பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோட்டாயி பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழா, நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது; வரும் 22ம் தேதி வரை, இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளில், கொடியேற்றத்தை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதல் நாள் இரவு பிரபல பாடகர், பத்மபூஷண் யேசுதாசின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று, காலை, 9:00 மணிக்கு, உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. தொடர்ந்து, முன்னணி கலைஞர்கள் பங்கேற்ற, பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கப்பட்டது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ராமநாதனின் (பிரகாஷ்) சாக்சபோன் இசை கச்சேரியும், 12:00 மணிக்கு, செம்பை வித்யாபீடம் மாணவர்களின் சங்கீத ஆராதனையும் நடந்தது. நேற்று மாலை, 5:30 மணியளவில், புவனா ராமசுப்புவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஹம்ஸத்வனி ராகத்தில், "விநாயகா நினுவினா ப்ரோசுடகு... என்ற பாடலும், பந்துவராளி ராகத்தில், "அர்த்தனாரீஸ்வரி ஆராதனயாமீம் என்ற பாடலும், மத்யமாவதி ராகத்தில், "தர்ம சம்வர்தனே... தனுஜ சம்வர்தனே... என்ற பாடலும், மோகன ராகத்தில், "கோபிகா மனோகரம் பஜே ஹம் கோவர்தனம் சுரவரம்... என்ற பாடலும், இசை பிரியர்களின் செவிக்கு, விருந்தாக அமைந்தன. நேற்று மாலை, பத்மபூஷண் கோபாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், பின், கலாரத்னம் ஜெயன் (ஜெயவிஜயா) ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. ஒருவார ஏகாதசி உற்சவத்தில், மூலவருக்கு ஸ்ரீபூதபலி, பள்ளிவேட்டை, ஆராட்டு, மஞ்சள் நீராடல், பவனி ஊர்வலம் என, தினமும் சிறப்பு வைபவம் நடைபெற்று வருகிறது. விழாவில் செம்பை கோதண்ட ராம பாகவதர், சென்னை என்.ஆர். பத்மனாபன் (அம்பி), சுகுமாரி நரேந்திர மேனோன் உள்ளிட்ட கலைஞர்களின், இசைக் கச்சேரியும் நடைபெற்றன. கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள், முன்னணி இசை கலைஞர்கள், இசை பிரியர்கள், விழாவில் கலந்து கொண்டனர்.