டாக்டர் அப்துல்கலாம், ஜனாதிபதி ஆவதற்கு முன்பு, ஹைதராபாத் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூட இயக்குநராக (1990) பதவி வகித்தார். அப்போது, கண் பரிசோதனை செய்வதற்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வந்திருந்தார். பாதுகாவலர்கள் யாரும் உடன் வரவில்லை. பதவிக்கேற்ற படாடோபம் இல்லாமல் எளிமையாக இருந்ததால், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை. மருத்துவர்கள் கலாமின் கண்களைப் பரிசோதித்தனர். பின், சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சைக்கான கட்டணத்தை பணமாகச் காசோலையாகக் கொடுத்தார் கலாம். மருத்துவமனை விதிமுறைப்படி, காசோலை வாங்குவதில்லை என அலுவலர்கள் அதை வாங்க மறுத்தனர். அவரிடம் ரொக்கமாக பணமில்லை. உடனே, சில ஊழியர்கள் அவரை இலவசப்பிரிவிற்குச் செல்லும்படி அனுப்பினர். இலவசப்பிரிவில் அனுமதி வழங்கி சிகிச்சை செய்யப்பட்டது. சற்று நேரத்தில், கலாமைப் பார்ப்பதற்கு மதுரையைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மூலம், இந்திய பாதுகாப்புத் துறையில் உயர் பதவியில் இருப்பவர் இலவசப்பிரிவில் இருக்கும் அப்துல்கலாம் என்ற உண்மை மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது. அதுவரை கலாமும் தன்னை யார் எனக் காட்டிக் கொள்ளவில்லை. இலவசப்பிரிவில் அவரை அனுமதித்ததற்காக மருத்துவர்கள் மன்னிப்பு கேட்டனர். அப்போது அவர், நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே! இலவசப் பிரிவிலும் எனக்கு சிறப்பான சிகிச்சை தானே அளித்தீர்கள்! என்னைக் கனிவுடன் கவனித்தீர்களே! அது மட்டுமல்ல! சாதாரண மக்களுக்கு எப்படி சிகிச்சை கொடுக்கிறீர்கள் என்பதை அறியும் வாய்ப்பாகவும் இது அமைந்தது, என்றார். பதவியில் இருந்தாலும் படாடோபம் இல்லாமல் பணிவைக் கடைபிடித்த அதிசயமனிதர் அப்துல்கலாமை நாமும் பின்பற்ற முயல்வோம். டாக்டர் அப்துல்கலாம்.