பதிவு செய்த நாள்
22
பிப்
2013
10:02
வாலாஜாபாத்: தென்னேரி தெப்போற்சவம், நேற்று முன் தினம் இரவு கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில், ஆண்டுதோறும் தெப்போற்சவம் நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கிராமத்திற்கு வந்து, தெப்பத்தில் பவனி வருவார். இந்தாண்டு தெப்போற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, தென்னேரி வந்தடைந்தார். அங்குள்ள மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேளதாளங்கள் ஒலிக்க அதிர்வேட்டுகள் முழுங்க வீதியுலா நடந்தது. பின்னர் வரதராஜப் பெருமாள் அயிமிச்சேரி, நாவட்டான்குளம், திருவங்காரணை, குன்னவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களில் மண்டகப்படி கண்டருளினார். மாலை 5:30 மணிக்கு, மீண்டும் தென்னேரியை வந்தடைந்தார்.
இரவு 8:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப் பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். ஏரியில் தெப்போற்சவத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால், நிலை தெப்பல் நடந்தது. பக்தர்கள் உற்சாகத்துடன் பெருமாளை வணங்கி சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, தென்னேரி கிராமத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.