நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் பூக்குழி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2013 10:02
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வழுக்குமரம் ஏறுதல் மற்றும் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்., 11 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடந்த விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கரந்தன்மலை தீர்த்தம் எடுத்து அம்மனுக்கு காப்புக் கட்டினர். விழாவில் அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள், தீபாராதனை செய்யப்பட்டது. பால்குடம், கரும்புத்தொட்டில் கட்டுதல், பொங்கல் வைத்து மா விளக்கெடுத்தனர். அம்மன் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட கேடயம், சிம்மம், அன்னம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 5 மணி முதல் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். காந்தி நகரில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து பூக்குழியில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கம்பம் அம்மன் குளத்தில் விடப்பட்டது. விழாவில் நிறைவு நாளான இன்று காலை 9 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோயில் தக்கார் அறிவழகன், கோயில் பரம்பரை பூசாரிகள் சொக்கையா, சின்னராசு, சுப்புராசு, நடராசு ஆகியோர் செய்து இருந்தனர்.