பதிவு செய்த நாள்
27
பிப்
2013
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், இன்று காலை விஸ்வரூப தரிசனம் நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல், இந்த ஆண்டு உற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும், காலை மற்றும் மாலை, பல்வேறு வாகனங்களில், காமாட்சியம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.கடந்த 24ம் தேதி இரவு, பிரபல உற்சவமான வெள்ளி ரதம் உற்சவம் நடந்தது. மறுநாள் இரவு கொடியிறக்கம் நடந்தது. நேற்று இரவு மகாமேரு உற்சவம் நடந்தது. உற்சவர் காமாட்சியம்மன் வீதியுலா முடிந்ததும், மூலஸ்தானத்திற்கு எழுந் தருளினார். இன்று, காலை 5:00 மணிக்கு, பிரபல உற்சவமான விஸ்வரூப தரிசனம் நடைபெறும். கோமாதா, மூலவர், உற்சவரை ஒரே நேரத்தில், மூலஸ்தானத்தில் தரிசிப்பது விஸ்வரூப தரிசனம். காலை, 5:00 மணியிலிருந்து, 7:00 மணி வரை, விஸ்வரூப தரிசனம் நடைபெறும். மூலவர் காமாட்சியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகும்.