மன்னர்களுக்கான பள்ளிப்படை கல்வெட்டு: தமிழகத்தில் முதல்முறையாக கண்டுபிடிப்பு
பதிவு செய்த நாள்
06
ஜன 2026 12:01
கிருஷ்ணகிரி; தமிழகத்தில் முதல் முறையாக, மன்னர்களுக்கான பள்ளிப்படை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குரும்பட்டி சாமுண்டியம்மன் பகுதி தென்னந்தோப்பு மற்றும் காவேரிப்பட்டணம் தேர்பேட்டை விநாயகர் கோவில் கருவறை ஆகிய இடங்களில், ஒரே அமைப்பில், 2 நடுகல் இருப்பதை, பாறை ஓவிய ஆர்வலர் சதாநந்தன் கிருஷ்ணகுமார் தகவல் அளித்தார். அதன்படி, வரலாற்று ஆய்வு, ஆவணப்படுத்தும் குழு, அரசு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து, ஆய்வு கொண்டன. இது குறித்து, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது: வீரர்களுக்கு நடுகல் எடுப்பது போன்று, இறந்த மன்னர்களுக்கு எடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் பள்ளிப்படை என்றும், அவை கோவிலாகவே எடுக்கப்பட்டதால், பள்ளிப்படை கோவில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. பள்ளிப்படை என்பது அரசர் குலத்துக்கானது. அதில் இறந்த மன்னர்கள் சிவனை வழிபடுவது போல் காட்டுவதில்லை. மாறாக அவர்களே சிவ வடிவம் பெற்று விடுகிறார்கள். அதாவது அந்த கோவிலில் இறைவனே, இறந்த மன்னனின் பெயரால் அழைக்கப்படுவர். தற்போது கிடைத்திருக்கும் இரண்டு நடுகற்கள், நடுகல்லுக்கும், பள்ளிப்படைக்கும் இடைப்பட்ட வகையை சேர்ந்தது. அதாவது இறந்தவன் பள்ளிப்படை எடுக்கும் அளவுக்கு ஒரு பெரிய மன்னனல்ல. ஆனால் நடுகற்களில் காட்டப்படும் சாதாரண வீரனும் அல்ல. அவர் ஒரு, குறுநில மன்னன். எனவே தான், வீரனை போன்று நடுகல்லாகவும் இல்லாமல், மன்னர்களை போன்று பள்ளிப்படையாகவும் இல்லாமல், புதுமையான நினைவு சின்னம் எடுத்துள்ளனர். இவை, 15ம் நுாற்றாண்டை சேர்ந்த, 500 ஆண்டுகள் பழமையானது. இதில், நான்கடி சதுர பலகை கல்லில் ஒரு கோவிலும், அதன் கருவறையில் லிங்கமும் உள்ளது. இருபுறமும், 2 நந்திகள் லிங்கத்தை பார்த்த வண்ணம் அமர்ந்துள்ளன. இவை அனைத்தும் ஒரு கோவிலை குறிக்கின்றன. கோவில் விமானத்தின் இருபுறமும் சந்திரர், சூரியனின் கோட்டுருவங்கள் உள்ளன. இது, சூரியர், சந்திரர் இருக்கும் வரை இறந்த, இப்பெருமகனாரின் புகழ் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளம். லிங்கத்தின் இருபுறமும் காட்டியிருக்கும் குடை மற்றும் கண்ணாடி ஆகியவை, ஒரு குறுநில மன்னின் அடையாளம். இதன் கீழே, நேராய் நம்மை பார்த்து அமர்ந்துள்ள சிம்மமும், அதை நோக்கி இரு புறமும் நடந்து வரும் யானைகளும் காட்டப்பட்டுள்ளன. இவை இறந்த தலைவனின் பலத்தை குறிப்பதாகும். எனவே, இதை பள்ளிப்படை நடுகல் எனலாம். பள்ளிப்படை கோவில்கள் தனியாகவும் நடுகற்கள் தனியாகவும், இதுவரை பதிவாகி உள்ளன. இரண்டும் இணைந்து, தமிழத்தில் இதுவரை ஒரு நடுகல் ஆவணப்படுத்தப் படவில்லை. எனவே, இதுவே, தமிழகத்தின் முதல் பள்ளிப்படை நடுகல்லாகும். இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், வரலாற்றுக் குழு செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் விஜயகுமார், ஆசிரியர் பாலாஜி, காப்பாட்சியர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
|