பதிவு செய்த நாள்
27
பிப்
2013
11:02
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள, சிறப்பு மிக்க வெண்காட்டீஸ்வரர் கோவில் போதிய, பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது.மதுராந்தகம் நகர் கடப்பேரி பகுதியில், புகழ்பெற்ற வெண்காட்டீஸ்வரர் திருகோவில் அமைந்துள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், கி.பி.914 முதலாம் பராந்தகன் மதுராந்தகத்தை உருவாகினான் என்றும், கண்டராதித்த சோழனால், கி.பி.964 இக்கோவில் கட்டப்பெற்றது என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்குதினமும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, ஈசனை வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.பக்தர்கள் அதிகம் இக்கோவில் குளத்தில் நீராடி, வெண்காட்டீஸ்வரரை வணங்கினால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. இதனால், பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும், இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரதோஷம், சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி, ஆருத்தரா தரிசனம் உள்ளிட்ட நாட்கள் விஷேசமானவை.வரலாற்று புகழ் பெற்ற இக்கோவில், தற்போது முட்புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. தினந்தோறும் சேகரமாகும், குப்பையை கோவில் வளாகத்திலேயே எரிக்கின்றனர். கோவிலுக்குள்வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், உணவு கழிவுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. பராமரிப்பு இல்லைகோவில் கோபுரத்தில், ஆங்காங்கே செடிகள் வளர்ந்துள்ளன. புனிதமாக கருதப்படும், இக்கோவில் குளம் தூர்வாரப்படாமல், தண்ணீர் பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது. குளம் போதிய பராமரிப்பின்றி உள்ளதால், அப்பகுதி மக்கள் இக்குளத்தை அசுத்தம் செய்து வருகின்றனர்.இதுகுறித்து, மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "கோவிலுக்குள் உள்ள அறைகளில் வவ்வால்கள் சுற்றித்திரிகின்றன. முறையாக பராமரிக்காவிட்டால், கோவில் பாழடைந்து விடும். எனவே, புகழ் பெற்ற இத்திருத்தலத்தை பாதுகாக்க, அறநிலைய துறை உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.