பதிவு செய்த நாள்
27
பிப்
2013
11:02
கும்பகோணம்: சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலமாகவும் திகழ்வது, கும்பகோணம் ஆராவமுதன் என்கிற சாரங்கபாணி ஸ்வாமி கோவிலாகும்.
இக்கோவிலின் தெப்பத்திருவிழா கடந்த, 20ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் துவங்கியது. 21ம் தேதியன்று இரவு கோவிலிலிருந்து பெருமாள் உபயநாச்சியார்களுடன் பிரகாரத்தில் புறப்பாடாகி, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சடாரி திருமஞ்சனம் மற்றும் மண்டப ஆராதனம் கண்டருளலும் நடந்தது. நேற்று முன்தினம் காலை உபயநாச்சியார்களுடன் புறப்பாடு நடந்து, 0ஹேம புஷ்கரணி எனும் பொற்றாமரை திருக்குளத்தில், மணிரத்ன புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சாரங்கபாணி ஸ்வாமி எழுந்தருளி சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் நேற்று முன்தினம் இரவு விசேஷ வாண வேடிக்கைகளுடன், பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப பவனி நடைபெற்றது. இந்த தெப்பத்திருவிழாவை காண, நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொற்றாமரை குளத்துக்கு வந்திருந்து, தெப்ப திருவிழாவை கண்டுகளித்தனர். பின்னர் இரவு பெருமாள் ஆஸ்தானத்துக்கு திரும்ப எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தெப்பத்திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை, கும்பகோணம் டி.எஸ்.பி (பொ) சீனிவாசன் தலைமையில், போலீஸார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.