திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு தங்க தேர் செய்ய திட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2013 10:03
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு 2.8 கோடி ரூபாய் மதிப்பில் தங்க தேர் செய்ய திட்டமிட்டுள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார். காரைக்கால் திருநள்ளர் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப் பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழக கோவில்களை போல் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலும் தங்க தேர் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று கோவிலுக்கு புதிதாக தங்க தேர் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி கூறியதாவது: தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவேற்காடு, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் உள்ளது. அது போல், திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கும் தங்க தேர் செய்ய முடிவெடுத்துள்ளோம். கோவிலின் இருப்பு தொகை பயன்படுத்தாமல், பக்தர்களின் நன்கொடை கொண்டு, தங்க தேர் செய்யப்படும். புதிய தங்க தேர் 8 கிலோ தங்கம், 450 கிலோ செப்பு தகடு மூலம் 16 அடி உயரத்திலும், 8 அடி அகலத்தில் எண்கோண வடிவில் உருவாக்கப்பட உள்ளது. தேர் செய்ய 150 கன அடி மரம் பயன்படுத்தப்படும். இதற்கு சுமார் 2.8 கோடி ரூபாய் செலவாகும்.தேர் செய்ய "ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோல்டன் ரதம் என்ற பெயரில் பக்தர்கள் நன்கொடை அனுப்பலாம். தேர் நன்கொடைக்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கும் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.