பதிவு செய்த நாள்
06
மார்
2013
10:03
திருத்தணி: திருத்தணி மலைக்கோவிலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்காத லிப்ட், தமிழக கவர்னர் வருகையை ஒட்டி அதிகாரிகள் சீர்படுத்தினர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசனம் செய்வர். விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்ல, கோவிலின் பின்புறம் லிப்ட் இருந்தது. கடந்த, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து இருந்தது.
இந்நிலையில், தமிழக கவர்னர் ரோசய்யா, நேற்று, திருத்தணி முருகன் கோவில் மற்றும் நல்லாட்டூர் வீரஆஞ்சநேயர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் வருவதை ஒட்டி, இயங்காத லிப்ட்டை அதிகாரிகள் சீர்படுத்தினர். கவர்னர் வருகையை ஒட்டி, நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் சாலைகளை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் துரித கதியில் சரி செய்தனர்.திருத்தணியில், சுவாமி தரிசனம் முடித்து, நேற்று மதியம், நல்லாட்டூர் வீரஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார் கவர்னர். அவர் வருகையை ஒட்டி, நல்லாட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை கோவில் வளாகத்தில் மரியாதை செலுத்த நிற்க வைத்தனர். மதியம் பசியை தாங்கிக் கொண்டு, மாணவர்கள் நின்று கொண்டிருந்ததை கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.