பதிவு செய்த நாள்
06
மார்
2013
10:03
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரடி வளாகத்தில் மீண்டும் துவங்கியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா, ஆடிப்பெருவிழா உற்சவங்கள் விமர்சையாக நடப்பது வழக்கம். மேலும், பிரதோஷம், சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, சனி மற்றும் கேது பெயர்ச்சி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, திருமணம், காதணி, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதனால், விருத்தகிரீஸ்வரர் கோவில் எப்போதும் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும். பல்வேறு பகுதிகளிலிருந்து வருவோர், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கோவில் முன்புறம் உள்ள தேரடி திடலில் நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில், தேரடி பகுதியை ஆக்கிரமித்து காய்கறி, பழங்கள், பீடா ஸ்டால்கள், தள்ளுவண்டி கடைகள் வைத்திருந்ததால், பக்தர்கள் அவதியடைந்தனர். மாசிமக விழாவையொட்டி, இரண்டு வாரங்களுக்கு முன், தேரடி திடல் மற்றும் நான்குமாட வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் திருவிழா முடிந்ததும், தேரடி திடல், நான்கு மாட வீதிகளை பலர் மீண்டும் ஆக்கிரமித்து கடை வைக்கத் துவங்கியுள்ளனர். இதனால், அவ்வழியாக சென்று வர பக்தர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே பக்தர்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி, கோவில் வளாகம் மற்றும் தேரடி திடலில் தொடரும் ஆக்கிரமிப்புகளை, அகற்ற நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவேண்டும்.