பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா துவங்கியதையடுத்து, திருச்சி மாநகரம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், உலக பிரசித்திப் பெற்ற புஷ்பாபிஷேகம் எனப்படும் பூச்சொரிதல் விழா, நேற்று காலை கோலாகலமாக துவங்கியது. அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண்ணிய வஜனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. காலை, 8.,30 மணிக்கு மேல், 9.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அதைத்தொடர்ந்து, அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. முன்னதாக, கோயில் இணை கமிஷனர் தென்னரசு தலைமையில் யானை மீது ஊர்வலமாக பூ கொண்டு செல்லப்பட்டது. சமயபுரம் கண்ணனூர் டவுன் பஞ்சாயத்துத்தலைவர் அம்சவள்ளி, நகரச் செயலாளர் சம்பத், ஜெ., பேரவை செயலாளர் ராமு மற்றும் உள்ளூர் பிரமுகர்கள், பல்வேறு வகையான பூக்களை, மூங்கில் தட்டுகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு சாத்தினர். அதைத்தொடர்ந்து சமயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த, எட்டு பட்டி கிராம மக்கள், பூக்களை கொண்டு வந்து சாத்தினர். திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து, அம்மன் படம் வைத்த அலங்கார ஊர்திகளில் விடிய, விடிய பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு சாத்தினர். திருவிழா கோலம்: நேற்று முதல், பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருச்சி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள, பல்வேறு அம்மன் கோயில்கள் உள்ளிட்ட கோயில்களிலிருந்து பூக்கள் சமயபுரம் கொண்டு செல்லப்படும். பக்தர்களின் தாகம் தீர்க்க, மாநகரம் முழுவதும் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், ஆட்டோ தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர், பக்தர்கள் தண்ணீர் பந்தல்களை அமைத்து, நீர், மோர், பானகம் வழங்கினர். ஏராளமான இடங்களில் அன்னதானம் நடந்தது. இதனால், திருச்சியிலிருந்து, சமயபுரம் வரை செல்லும் பாதை முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருந்தது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதேபோல தண்ணீர் பந்தல்கள், அன்னதானம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மன் விரதம் துவக்கம்: பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற தெய்வங்களை வேண்டி விரதம் மேற்கொள்வது மரபு. ஆனால் "மரபுமாறி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், மாயசூரனை வதம் செய்ய பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், மும்மூர்த்திகளை நோக்கி, சமயபுரம் மாரியம்மனின் பச்சைப்பட்டினி விரதம் நேற்று துவங்கியது.நேற்று துவங்கி, பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை, 28 நாள் விரதம் தொடரும். விரதம் மேற்கொள்ளும் நாட்களில் அம்மனுக்கு வழக்கமாக செய்யப்படும் தளிகை நைவேத்யங்கள் நிறுத்தப்பட்டு, துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம், இளநீர் மட்டுமே நைவேத்யம் செய்யப்படும்.