பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
செக்கானூரணி: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு செக்கானூரணி, கருமாத்தூர் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு, நேர்த்திக்கடனை செலுத்தினர். செக்கானூரணி அருகே ஆ.கொக்குளம் ஆதிசிவன் கோயில், காமாட்சியம்மன் கோயில், கருமாத்தூர் பகுதியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயில், விருமண்டி கோயில், பேச்சியம்மன் கோயில், கோட்டை மந்தை கருப்பசாமி கோயில், நல்லகுரும்பய்யர் கோயில், ஒச்சாண்டம்மன் கோயில், காக்குவீரன் கோயில், நல்லமாயன் கோயில், முதலைக்குளம் கம்பகாமாட்சி கருப்பசாமி கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், காலையில் இருந்தே தங்கள் குலதெய்வக்கோயில்களுக்கு வந்து வழிபட்டனர். பொங்கல் வைத்தும், மொட்டையிட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று இரவு பக்தர்கள் வந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டி.எஸ்.பி.,க்கள் ரவிச்சந்திரன் (திருமங்கலம்), புருசோத்தமன் (திருப்பரங்குன்றம்) தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கருமாத்தூரில் தற்காலிக "கண்ட்ரோல் ரூம் செயல்பட்டது.