பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
ஓசூர்: மகா சிவராத்தியையொட்டி ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில், கெலமங்கலம் சிவநஞ்சுண்டேஸ்வரர் மலைக்கோயில்களில் நேற்று அதிகாலை முதல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிவபெருமான், லிங்கத்தில் தோன்றி அருளிய நாளை பக்தர்கள் சிவராத்திரியாக கொண்டாடுகின்றனர். சிவராத்திரியையொட்டி ஓசூர், கெலமங்கலம், சூளகிரி, பாகலூர் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார மற்றும் லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயிலில், சிவராத்திரியையொட்டி நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 5 மணி முதல் லட்சார்ச்சனை பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரியையொட்டி நான்கு கால பூஜைகள் இரவு, 10 மணிக்கு துவங்கியது. இரண்டாம் கால பூஜைகள், 12 மணிக்கும், மூன்றாம் கால பூஜைகள் அதிகாலை, 2 மணிக்கும், நான்காம் கால பூஜைகள் அதிகாலை, 4 மணிக்கும் நடந்தது. சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது.
*ஓசூர் நெசவாளர் தெருவில் சோமேஸ்வரர் கோயில், ராம்நகர் சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர், ஜனபர் தெரு நஞ்சுண்டேஸ்வரர் கோயில், ஏரித்தெரு ஜலகண்டேஸ்வரர் கோயில், காமராஜ் காலனி காசி விஸ்வநாதர் கோயில், சூளகிரி அத்திமுகம் ஐராவதேஷ்வரர் கோயில், சூளகிரி காசி விஸ்வநாதர் கோயில், பாகலூர் ஈஸ்வரன் கோயில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள், அலங்கார ஆராதனைகள் நடந்தது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* கெலமங்கலம் அருகே பேவநத்தத்தில் மலை மீது, 300 அடி உயரத்தில் உள்ள சிவநஞ்சுண்டேஸ்வரர் சாமி கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. சாமிக்கு அலங்காரம், சிறப்பு தீபரானைகள் நடந்தது. தமிழக, கர்நாடகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் சோமசேகர் ஆரத்தியா, சிவண்ணா ஆகியோர் செய்தனர். இரவு பாட்டுக்கச்சேரி, நாடகங்கள் நடந்தது. தமிழக, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.