பதிவு செய்த நாள்
18
மார்
2013
10:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமான எல்லீஸ்நகர் காலி இடத்திற்கு, வாகன நிறுத்த உரிமம் வழங்க மாநகராட்சிக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மீனாட்சி கோயில் இணை கமிஷனர் தாக்கல் செய்த மனு: கோயிலுக்குச் சொந்தமாக எல்லீஸ்நகரில் 7.28 ஏக்கர் நிலம் உள்ளது. அறநிலையத்துறை அலுவலர்கள் குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளோம். பக்தர்கள் நலன் கருதி, தற்காலிக வாகன நிறுத்தம் செய்ய எல்லீஸ்நகரில் 3.50 ஏக்கர் ஒதுக்கினோம்.இதை எதிர்த்து சம்சுதீன் 2011 ல் ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.இந்நிலையில் செல்வகுமார் என்பவர், "அனுமதியின்றி வாகன கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும், என பொதுநல மனு செய்தார். நீதிபதிகள், "மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க, சம்சுதீனுக்கு உரிமை உண்டு. நகராட்சி சட்டப்படி, வாகன நிறுத்த உரிமம் பெறுவதிலிருந்து, கோயிலுக்கு விலக்கு அளிக்க முடியாது, என உத்தரவிட்டனர். வாகன நிறுத்த உரிமம் கோரி, மாநகராட்சி கமிஷனரிடம் 2 முறை மனு அளித்தும், பரிசீலிக்கவில்லை. கோயில் நிர்வாகம், ஐகோர்ட்டில் மனு செய்தது. மனுவை 4 வாரத்தில் பரிசீலிக்க, கமிஷனருக்கு கோர்ட் 2012 ஜன.,18 ல் உத்தரவிட்டது. உரிமம் அளிக்க கமிஷனர் மறுத்து விட்டார். எல்லீஸ்நகரில், வாகன நிறுத்த உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு மனு வந்தது.
மனுதாரர் வக்கீல் எஸ்.மனோகர் ஆஜரானார்.சம்சுதீன் தாக்கல் செய்த பதில் மனு:மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, பல இடங்களில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க உரிமம் பெற்றுள்ளோம். டி.பி.கே.ரோடு, எல்லீஸ்நகரில் கட்டணம் வசூலிக்க எங்களுக்கு உரிமை உண்டு. அனுமதியின்றி, கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. ஐயப்பன் கோயில் சீசனின்போது, எல்லீஸ்நகரில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு, கோயில் நிர்வாகத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கத்தயார், என குறிப்பிட்டார். மாநகராட்சி கமிஷனர்,""பழைய சென்ட்ரல் மார்க்கெட், பழைய அருப்புக்கோட்டை பஸ் ஸ்டாண்ட், எல்லீஸ்நகரில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க, சம்சுதீன் உரிமம் பெற்றுள்ளார். உரிம கட்டணமாக 19 லட்சத்து 10 ஆயிரத்து 390 ரூபாய் செலுத்தியுள்ளார். பிறரை அனுமதித்தால், சம்சுதீனின் உரிமை பாதிக்கப்படும், என பதில் மனு செய்தார். போக்குவரத்து துணை கமிஷனர், ""ஐயப்பன் கோயில் மகர ஜோதியின் போது, மீனாட்சி கோயிலுக்கு அதிக வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர். வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. சாலைகளில் நிறுத்துவதால், அதிக நெரிசல் ஏற்படுகிறது. மகரஜோதிக்கு வரும் வாகனங்களை, மீனாட்சி கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில், நிறுத்த அனுமதிக்கலாம். மாநகராட்சி முடிவெடுக்க வேண்டும், என பதில் மனு செய்தார்.நீதிபதி: அதிக தொகை செலுத்தி, சம்சுதீன் உரிமம் பெற்றுள்ளார் என்பதற்காக, கோயில் நிர்வாகத்திற்கு உரிமம் வழங்க முடியாது என மாநகராட்சி மறுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. தனியார் இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க, எந்த தடையுமில்லை. கோயில் நிர்வாகத்திற்கு, மாநகராட்சி கமிஷனர் உரிமம் வழங்க வேண்டும், என்றார்.