அழகர்கோவில்: பராமரிப்பில்லாத அழகர்கோவில் தெப்பத்தை சீர் செய்து நிரந்தரமாக தண்ணீர் தேக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன. சித்திரை மற்றும் ஆடித் திருவிழா சிறப்பு வாய்ந்தன. மாசி பவுர்ணமியில் நடக்கும் தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.தெப்பத்திருவிழா மட்டும் பொய்கைகரைப்பட்டி தெப்பத்தில் நடக்கிறது. கோயிலில் தெப்பக்குளம் அமைக்க போதுமான இடம் இல்லாததால் 400 ஆண்டுகளுக்கு முன், திருமலை நாயக்கர் மன்னர் பொய்கைகரைப்பட்டியில் தெப்பக்குளம் அமைத்தார். அழகர்கோவில் மலைப் பகுதியில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் வரும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன.கோயில் பராமரிப்பில் இருந்த இந்த வாய்க்கால்களை ஆண்டுதோறும் அதிகாரிகளால் சுத்தம் செய்யப்பட்டன. இதனால் குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். அப்பகுதியினர் வாய்க்கால்களை ஆக்கிரமித்தனர். பிளாட் அமைத்தவர்களும் வாய்க்காலை மறைத்து ரோடு அமைத்தனர். இதனால் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது கேள்விக்குறியானது.கடந்த 25 ஆண்டுகளில் 3 முறை மட்டும் தெப்பத்தில் தண்ணீர் தேங்கியது. படிகள், மைய மண்டபம் சிதைந்து போயின. இதுகுறித்து தினமலர் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியானது. அப்போதைய துணை கமிஷனர் தெப்பத்தை புதுப்பிக்க ரூ.60 லட்சத்தில் திட்டம் தயாரித்து பணிகளை துவக்கினார். தெப்பத்தின் ஒரு பகுதி தூர்வாரப்பட்டு, படிகள் புதுப்பிக்கப்பட்டன. அவர் மாற்றப்பட்டதால் மராமத்து பணி பாதியில் விடப்பட்டன. பிறகு தெப்பத்தை சீர் செய்ய யாரும் முன்வரவில்லை.தற்போது தெப்பத்தின் அனைத்துப் பகுதி படிகளும் உடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளன. மைய மண்டபமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவற்றை சீர் செய்ய வேண்டும்.