பதிவு செய்த நாள்
19
மார்
2013
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரசாதக் கடை, 9.25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரசாதக் கடை, மேற்கு கோபுர வாயிலில் உள்ள திண்ணை கடை, முடி காணிக்கை ஆகியவை, நேற்று ஏலம் விடப்பட்டது. வரும் ஜூலை மாதம், 1ம் தேதியில் இருந்து, அடுத்த ஆண்டு ஜூன் மாதம், 30ம் தேதி வரைக்கான ஏலத்தில், பலர் கலந்து கொண்டனர்.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் உதவி ஆணையர் தியாகராஜன், ஆய்வாளர் பார்வதி, ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது. இதில் பிரசாதக் கடை, 9.25 லட்சம் ரூபாய்க்கும், திண்ணைக் கடை, 3.65 லட்சம் ரூபாய்க்கும், முடி ஏலம், 35 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது.கடந்த ஆண்டு பிரசாதக் கடை, 8.34 லட்சம் ரூபாய்க்கும், திண்ணைக் கடை, 3.24 லட்சம் ரூபாய்க்கும், முடி காணிக்கை, 24 ஆயிரம் ரூபாய்க்கும், ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட, 12 சதவீதம் ஏல தொகை அதிகரித்து உள்ளதாக, உதவி ஆணையர் தியாகராஜன் தெரிவித்தார்.