தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று (19ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரமும் செய்து ஆராதனைகள் நடந்தது.நேற்று 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மயானக்கொள்ளை வைபவம் நடந்தது. காலை 6 மணிக்கு மணிமுக்தா ஆற்றிலிருந்து சக்தி கரகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோவில் அருகில் உள்ள மயானத்தில் காளி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டது. முதல் நாள் இரவு படையலிட்ட சுண்டலை ஆற்றங்கரையில் சூறையிட்டு மயானகொள்ளை நடந்தது. அதை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துச் சென்றனர்.பூசாரிகள் பாஞ்சாலை, கோவிந்தசாமி, கண்ணன், சுரேஷ், குமார், ஆறுமுகம், முருகன் ஆகியோர் பூஜைகளை செய்தனர். மயானக்கொள்ளை திருவிழாவை தொடர்ந்து இன்று (19ம் தேதி) மாலை 3 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.