சுமங்கலை என்னும் தேவலோகப் பெண், தன் தோழிகளுடன் இமயமலைச் சாரலைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தாள். அங்கே திருமாலின் அம்சமான கபிலமுனிவர் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டுஇருந்தார். அதில் ஒரு சீடர் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருந்தார். சுமங்கலை தன் தோழியரிடம் அவரைக் கேலி செய்து பேசி சிரித்தாள். சீடரை அவமதித்த சுமங்கலையைக் கோபத்துடன் சபித்துவிட்டார் கபிலமுனிவர். நீ பூலோகத்தில் மானிடப்பிறவி எடுப்பாய்! என்றார். சாபவிமோசனம் கேட்டு முனிவரின் காலில் விழுந்து சுமங்கலை அழுதாள். திருமாலின் அடியவர்களுக்கு அமுதிடும் (உணவிடுதல்) தொண்டு செய்தால் தேவலோகம் செல்லமுடியும் என்று வரம் தந்தார். அவள் குமுதவல்லி என்ற பெயரில் பிறந்து, திருமங்கையாழ்வாரை மணந்து, அடியவர்களுக்கு அமுதிடும் தொண்டு செய்து பரமபதம் அடைந்தாள்.