பதிவு செய்த நாள்
21
மார்
2013
04:03
ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. 151
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கையறுபு இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன் வரையும் என்ப
அறவன் போலும் அருளுமார் அதுவே. 152
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவுமணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. 153
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானற் சேக்கும் துறைவனோடு
யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. 154
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும் துறைவதற்குப்
பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. 155
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பதைப்ப ஒழிந்த செம்மறுத் தூவி
தெள்கழிப் பரக்கும் துரைவன்
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே. 156
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
காலை யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல் சேர்ப்பனொடு வாரான்
தான்வந் தனன்எம் காத லோனே. 157
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
கானலம் பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந் துறைவன் கண்டிக்கும்
அம்மா மேனிஎம் தோழியது துயரே. 158
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
பசிதின அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று இரக்குவன் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்டஇவள் நலனே. 159
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
நொந்ததன் தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின் மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி பெரும மய்ங்கினள் பெரிதே. 160
ஐங்குறுநூறு - 17. சிறுவெண் காக்கைப் பத்து.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப்
பயந்தநுதல் அழியச் சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்தே. 161
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு
பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே. 162
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும்
துறைவன் துறந்தெனத் துறந்துஎன்
இறையேர் முன்கை நீக்கிய வளையே. 163
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி மருங்கின் அயிரை ஆரும்
தண்ணந் துறைவன் தகுதி
நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே. 164
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல்என்
இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. 165
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி
நல்ல வாயின நல்லோள் கண்ணே. 166
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன்
நல்குவன் போலக் கூறி
நல்கான் ஆயினும் தொல்கே என்னே. 167
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி அகமனை ஈனும்
தண்ணந் தூறைவன் நல்கி
ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. 168
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ்
புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன்
நெஞ்சத்து உண்மை யறிந்தும்
என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. 169
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன்
நல்லன் என்றி யாயின்
பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ. 170
ஐங்குறுநூறு - 18. தொண்டிப் பத்து.
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது
முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்
தொண்டி அன்ன பணைத்தோள்
ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. 171
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே
வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண்
உரவுக் கடல்ஒலித் திரையென
இரவி னானும் துயிலறி யேனே. 172
இரவி னானும் இந்துயில் அறியாது
அரவுறு துயரம் எய்துப தொண்டித்
தண்நறு நெய்தல் நாறும்
பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. 173
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை
பொங்கரி பரந்த உண்கண்
அம்கலில் மேனி அசைஇய எமக்கே. 174
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள்
நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியா மடந்தை
தொண்டி யன்னநின் பண்புல கொண்டே. 175
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்
தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடி
ஐதுஅமைந்து அகன்ற அல்குல்
கொய்தளிர் மேனி கூறுமதி தவறே. 176
தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறுதிரை திளைக்கும் இடுமணல் நெடுங்கோட்டு
முண்டக நறுமலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள்உற் றோரே. 177
தோளும் கூந்தலும் பலபா ராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல்
குட்டுவன் தொண்டி யன்ன
என்கண்டும் நயந்துநீ நல்காகக் காலே. 178
நல்குமதி வாழியோ நளிநீர்ச் சேர்ப்ப
அலவன் தாக்கத் துறையிறாப் பிறழும்
இன்னொலித் தொண்டி அற்றே
நின்னலது இல்லா இவள்சிறு நுதவே. 179
சிறுநனை வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறைதபு முதுகுருகு இருக்கும்
துரைகெழு தொண்டி அன்னஇவள் நலனே. 180
ஐங்குறுநூறு - 19. நெய்தற் பத்து.
நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉந்
துறைகெழு கொண்கன் நல்கி
உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே. 181
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்
கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்
அருந்திறல் கடவுள் அல்லன்
பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே. 182
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாடன் நல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும் களைஞரோ இலரே. 183
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும்
கடல்அணிந் தன்றுஅவர் ஊரே
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே. 184
அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய்
அரம்போழ் அவ்வளைக் குறுமகள்
நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே. 185
நாரை நல்லினம் கடுப்ப மகளிர்
நீர்வார் கூந்தல் உளரும் துறைவ
பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை
பல்கால் வரூஉம் தேரெனச்
செல்வா தீமோ என்றனள் யாயே. 186
நொதும லாளர் கொள்ளார் இவையே
எம்மொடு வந்து கடலாடு மகளிரும்
நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்
உடலகம் கொள்வோர் இன்மையின்
தொடலைக் குற்ற சிலபூ வினரே. 187
இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை
வைகறை மலரும்நெய்தல் போலத்
தகைபெரி துடை காதலி கண்ணே. 188
புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியில் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென
நல்லன வாயின தோழியென் கண்ணே. 189
தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்றஎம்
பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே. 190
ஐங்குறுநூறு - 20. வளைப் பத்து.
கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக்
கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல்
கானல் ஞாழற் கவின்பெறு தழையள்
வரையர மகளிரின் அரியள்என்
நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே. 191
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்
பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்
துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன
வீங்கின மாதோ தொழிஎன் வளையே. 192
வலம்புரியுழுத வார்மணல் அடைகரை
இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்
துரைகெழு கொண்கநீ தந்த
அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே. 193
கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை
ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க
நன்னுதல் இன்றுமால் செய்தெனக்
கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. 194
வளைபடு முத்தம் பரதவர் பகரும்
கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்
கெடலரும் துயரம் நல்கிப்
படலின் பாயல் நல்கி யோளெ. 195
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல்
ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்
தென்கழி சேயிறாப் படூஉம்
தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. 196
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே
புலம்புகொள் மாலை மறைய
நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. 197
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை
இளையர் ஆடும் தளைஅவிழ் கானல்
குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. 198
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும்
வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது
காண்கம் வம்மோ தோழி
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே 199
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே
விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி
நலங்கவர் பசலையை நகுக நாமே. 200