பதிவு செய்த நாள்
21
மார்
2013
04:03
ஐங்குறுநூறு - 21. அன்னாய் வாழிப் பத்து
அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின
பொன்வீ மணியரும் பினவே
என்ன மரம்கொல்அவர் சாரல் அவ்வே. 201
அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே. 202
அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பை
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலை கூவற் கீழ
மானுண்டு எஞ்சிய கலிழி நீரே. 203
அன்னாய் வாழிவேண் டன்னைஅது எவன்கொல்
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்
பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கி
நல்லள் நல்லள் என்ப
தீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே. 204
அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி
நனிநான் உடையள் நின்னும் அஞ்சும்
ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் நோகோ யானே. 205
அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்
மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்
தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்
பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண்பனி வைகிய வைக்கச் சினனே. 206
அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும்
உணங்கல கொல்லோநின் தினையே உவக்காண்
நிணம்பொதி வழுக்கில் தோன்றும்
மழைத்தலை வைத்துஅவர் மணிநெடுங் குன்றே. 207
அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்
கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்
பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டு
மணிநிற மால்வரை மறைதொறு
அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே. 208
அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே. 209
அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
புலவுச்சேர் துறுகல் ஏறி அவர்நாட்டுப்
பூக்கெழு குன்றம் நோக்கி நின்று
மணிபுரை வயங்கிழமை நிலைபெறத்
தணிதற்கும் உரித்துஅவள் உற்ற நோயே. 210
ஐங்குறுநூறு - 22. அன்னாய்ப் பத்து
நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழி வாடும் அன்னாய். 211
சாந்த மரத்ட பூதிழ் எழுபுகை
கூட்டுவிரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாமக்ல்வு அன்னாய் 212
நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்த
ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்
உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்
மீமிசை நன்னாட் டவர்வரின்
யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய். 213
சாரல் பலவின் கொழுந்துணர் நறும்பழம்
இருங்கள் விடரளை வீழ்ந்தென வெற்பில்
பெருந்தேன் இறாஅல் கீறும் நாடன்
பேரமர் மழைக்கண் கழிலத்தன்
சீருடை நன்னாட்டுச் செல்லும் அன்னாய். 214
கட்டளை யன்ன மணிநிறத் தும்பி
இட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்
புதன்மலர் மாலையும் பிரிவோர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய். 215
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை
நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற
நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்
பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்
கொய்திடு தளிரின் வாடிநின்
மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய். 216
பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ
மானினப் பெருங்கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவுமிவண்
மேனி பசப்பது எவன்கொல் அன்னாய். 217
நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம்
களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி
எழுதரு மழையின் குழுமும்
பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய். 218
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
இருங்கள் வியலறை வரிப்பத் தாஅம்
நன்மலை நாடன் பிரிந்தென
ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய். 219
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாள்இவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய். 220
ஐங்குறுநூறு - 23. அம்மவழிப் பத்து.
அம்ம வாழி தோழி கதலர்
பாவை யன்னஎன் ஆய்கவின் தொலைய
நன்மா மேனி பசப்பச்
செல்வல் என்பதம் மலைகெழு நாடே. 221
அம்ம வாழி தோழி நம்மூர்
நனிந்துவந்து உறையும் நறுந்தண் மார்வன்
இன் இனி வாரா மாறுகொல்
சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே. 222
அம்ம வாழி தோழி நம்மலை
வரையாம் இழியக் கோடல் நீடக்
காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும்
தண்பனி வடந்தை அச்சிரம்
முந்துவந்த் தனர்நம் காத லோரே. 223
அம்ம வாழி தோழி நம்மலை
மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்
துணீநீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய மன்ஆல் அவர்க்கினி
அரிய ஆகுதல் மருண்டனென் யானே. 224
அம்ம வாழி தோழி பைஞ்சுனைப்
பாசடை நிவந்த பனிமலர்க் குவளை
உள்ளகங் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல்
ஓரார் கொல்நம் காத லோரே. 225
அம்ம வாழி தோழி நம்மலை
நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன்
கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்
வன்புடை விறற்கவின் கொண்ட
வன்பி லாளன் வந்தனன் இனியே. 226
அம்ம வாழி தோழி நாளும்
நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்
ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி
நப்பிரிந்து உறைதோர் மன்றநீ
விட்டனை யோஅவர் உற்ற சூளே. 227
அம்ம வாழி தோழி நம்மூர்
நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்
இரந்துகுறை யுறாஅன் பெயரின்
என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே. 228
அம்ம வாழி தோழி நாம்அழப்
பன்னாள் பிரிந்த அறனி லாளன்
வந்தன னோமற்று இரவில்
பொன்போல் விறல்கவின் கொள்ளுநின் நுதலே. 229
அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினைக் காவல் நாகிப் பெரிதுநின்
மெல்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்
பொன்போல் விறற்கவின் தொலைத்த
குன்ற நாடற்கு அயர்வர்நன் மணனே. 230
ஐங்குறுநூறு - 24. தெய்யோப் பத்து.
யாங்குவல் லுநையோ ஓங்கல் வெற்ப
இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு தெய்யோ. 231
போதார் கூந்தல் இயலணி அழுங்க
ஏதி லாளனை நீபிரிந் ததற்கே
அழவிர் மணிப்பூண் அனையப்
பெயலா னாஎன் கண்ணே தெய்யோ. 232
வருவை யல்லை வாடைநனி கொடிதே
அருவரை மருங்கின் ஆய்மணி வரன்றி
ஒல்லென இழிதரும் அருவிநின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ. 233
மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய்
நன்னுதல் பசத்த லாவது துன்னிக்
கனவிற் காணும் இவளே
நனவிற் காணாள்நின் மார்பே தெய்யோ. 234
கையுற வீழ்ந்த மையில் வன்மொடு
அரிது காதலர்ப் பொழுதே அதனால்
தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப்
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ. 235
அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று
நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்
இன்னா வாடையும் மலையும்
நும்மூர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ. 236
காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. 237
வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்
குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும்
ஆஅல் அருவித் தண்மெருஞ் சிலம்ப
நீஇவன் வரூஉம் காலை
மேவரும் மாதோஇவள் நலனே தெய்யோ. 238
சுரும்புணக் களித்த புகர்முக வேழம்
இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூநின்
குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை
நேரிறைப் பணைத்தோள் ஞெகிழ
வாரா யாயின் வாழேம் தெய்யோ. 239
அறியோம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும்நின் மார்பே தெய்யோ. 240
ஐங்குறுநூறு - 25. வெறிப்பத்து
நம்முறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தா ளாயின்அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறியெயிற் றோயே. 241
அறியா மையின் வெறியென மயங்கி
அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்
ஆய்மலர் உண்கண் பசப்பச்
சேய்மலை நாடன் செய்த நோயே. 242
கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனம் கொள்குவை அனையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. 243
அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழ நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயஞ் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே. 244
பொய்யா மரபின் ஊர்முகு வேலன்
கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே. 245
வெறிசெறித் தனனே வேலன் கறிய
கன்முகை வயப்புலி கலங்குமெய்ப் படூஉ
புன்பலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே. 246
அன்னை தந்தது ஆகுவது அறிவன்
பொன்னகர் வரைப்பின் கன்னம் தூக்கி
முருகென மொழியும் ஆயின்
அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே. 247
பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றி
மலைவான் கொண்ட சினைஇயஞூ வேலன்
கழங்கினால் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம நின்றஇவள் நலனே. 248
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு
முருகென மொழியும் வேலன் மற்றவன்
வாழிய விலங்கு மருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே. 249
பொய்படு அறியாக் கழங்கே மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன்
ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள்
பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே. 250