பதிவு செய்த நாள்
21
மார்
2013
04:03
ஐங்குறுநூறு - 6. தோழி கூற்றுப் பத்து
நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே.51
வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய
எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே. 52
துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர நீயுற்ற சூளே. 53
திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ
ஊரின் ஊரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. 54
கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்
தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்
நல்லணி நயந்துநீ துறத்தலின்
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே. 55
பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே. 56
பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய
அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே. 57
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி
பிறர்க்கு மனையையால் வாழி நீயே. 58
கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்குமருந் தாகிய யான்இனி
இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே. 59
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியுரநின் மொழிவல் என்றும்
துங்சுமனை நெடுநகர் வருதி
அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே. 60
ஐங்குறுநூறு - 7. கிழத்தி கூற்றுப்பத்து
நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்
கைவண்மத்தி கழாஅர் அன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை அயர விரும்புதி நீயே. 61
இந்திர விழவின் பூவின் அன்ன
புந்தலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்துஇனி
எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே. 62
பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊர
எம்நலம் தொலைவ தாயினும்
துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. 63
அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர்
பலரே தெய்யஎம் மறையா தீமே. 64
கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புன லூர
புதல்வனை ஈன்றஎம் மேனி
முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே. 65
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ
யாரவள் மகிழ்ந தானே தேரொடு
தளர்நடைப் பதல்வனை யுள்ளிநின்
வளவமனை வருதலும் வெளவி யோனே. 66
மடவள் அம்மநீ இனிக்கொண்டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே
ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே. 67
கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர
பேணா ளோநின் பெண்டே
யாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே. 68
கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே
பலராடு பெருந்துரை மலரொடு வந்த
தண்புனல் வண்டல் உய்த்தென
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. 69
பழனப் பன்மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாணர் ஊர
தூயர் நறியர்நின் பெண்டிர்
பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே. 70
ஐங்குறுநூறு - 8. புனலாட்டுப் பத்து
சூதார் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து
நின்வெங் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே. 71
வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்
குவளை உண்கன் ஏஎர் மெல்லியல்
மலரார் மலிர்நிறை வந்தெனப்
புனலாடு புணர்துனை ஆயினள் எமக்கே. 72
வண்ண ஒந்தழை நுடங்க வாலிழை
ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்
கள்நறுங் குவளை நாறித்
தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே. 73
விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே. 74
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால்
அலர்தொடங் கின்றால் ஊரே மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை
நின்னோடு ஆடினள் தண்புனல் அதுவே. 75
பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்
தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்
ஒள்தொடி மடவரால் நின்னோடு
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. 76
அம்ம வாழியோ மகிழ்நநின் மொழிவல்
பேரூர் அலர்எழ நீரலைக் கலங்கி
நின்னொடு தண்புணல் ஆடுதும்
எம்மோடு சென்மோ செல்லல்நின் மனையே. 77
கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்புநெறி வந்த
சிறையழி புதுப்புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோஎம் தோள்புரை புனையே. 78
புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந
யார்மகள் ஆயினும் அறியா
நீயார் மகனைஎம் பற்றியோயே. 79
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ
நலத்தகு மகளிர்க்குத் தோள்துணை யாகித்
தலைப்பெயல் செம்புனல் ஆடித்
தவநனி சிவந்தன மகிழ்நநின் கண்ணே. 80
ஐங்குறுநூறு - 9. புலவி விராய பத்து
குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்
மலரணி வாயில் பொய்கை ஊரநீ
என்னை நயந்தனென் என்றநின்
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே. 81
வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள்
மகிழ்நன் மார்பின் அவிழினர் நறுந்தார்த்
தாதுன் பறவை வந்துஎம்
போதார் கூந்தல் இருந்தன எனவே. 82
மணந்தனை அருளாய் ஆயினும் பையத்
தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை யூரன் பண்டெனப் படற்கே. 83
செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணின் எனா குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே. 84
வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுவில் யானர்மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி
நகாரோ பெருமநின் கண்டிசி ணோரே. 85
வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல்
நீள்வயல் நண்ணி இமிழும் ஊர
எம் இவன் நல்குதல் அரிது
நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே. 86
பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும்
யாணர் ஊரைநின் மனையோள்
யாரையும் புலக்கும் எம்மைமற் றெவனோ. 87
வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை யூரனை எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்ப
தொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே. 88
அம்மவாழி பாண எவ்வைக்கு
எவன் பெரி தளிக்கும் என்ப பழனத்து
வண்டு தாதூதும் ஊரன்
பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே. 89
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்
அன்ன தாகலும் அறியாள்
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே. 90
ஐங்குறுநூறு - 10. எருமைப் பத்து
நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து
வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனியூரன் மகளிவள்
பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. 91
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்
காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்
நுந்தை நும்மூர் வருதும்
ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே. 92
எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்
பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா
செய்த இனைய மன்ற பல்பொழில்
தாதுண வெறுக்கைய ஆகி இவள்
போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே. 93
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை
மகளிர் அன்ன துணையோடு வதியும்
நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே. 94
கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ
நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும்
புனல்முற் றூரன் பகலும்
படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே. 95
அணிநடை எருமை ஆடிய அள்ளல்
மணிநிற நெய்தல் ஆமபலொடு கலிக்கும்
கழனி ஊரன் மகளிவள்
பழன் ஊரன் பாயல்இன் துணையே. 96
பகன்றை வான்மலர் மிடைந்த கோட்டைக்
கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம்
பொய்கை ஊரன் மகளிவள்
பொய்கைப் பூவினும் நறுந்தண் ணியளே. 97
தண்புணல் ஆடும் தடங்கோட்டு எருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ஊர
ஒண்டொடி மடமகள் இவளினும்
நுந்தையும் யாயும் துடியரோ நின்னே. 98
பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை
கழனி யெருமை கதிரொடு மயக்கும்
பூக்கஞல் ஊரன் மகளிவள்
நோய்க்குமருந் தாகிய பணைத்தோ ளோளே. 99
புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை
மணலாடு சிமையத்து எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகளிவள்
பாணர் நரம்பினும் இன்கிள வியளே. 100