Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புறநானூறு (பகுதி-4) புறநானூறு (பகுதி-6)
முதல் பக்கம் » புறநானூறு
புறநானூறு (பகுதி-5)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2013
03:03

புறநானூறு - 201. இவர் என் மகளிர்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன் : இருங்கோவேள்.
திணை; பாடாண்.
துறை: பரிசில்.
குறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)

சூஇவர் யார்?சூ என்குவை ஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,
படுமணி யானைப்,பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே  5
தந்தை தோழன்: இவர்என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,
செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,
உவரா ஈகைத், துவரை ஆண்டு,  10
நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறற்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்!  15
யான்தர, இவரைக் கொண்மதி! வான்கவித்து
இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்
பொன்படு மால்வரைக் கிழவ! வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்,
கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே!  20

புறநானூறு - 202. கைவண் பாரி மகளிர்!

பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டோன்: இருங்கோவேள்.
திணை:பாடாண்.
துறை: பரிசில்.
குறிப்பு: இருங்கோவேள் பாரி மகளிரைக் கொள்ளானாக, அப்போது பாடியச் செய்யுள் இது. (கபிலரின் உள்ளம் மிகவும் நொந்து போயின நிலையைச் செய்யுள் காட்டுகின்றது.)

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்,
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச், சிதறுபொன் மிளிரக்,
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி,  5
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்,
கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!  10
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று,சூஇவர்
கைவண் பாரி மகளிர்சூ என்றஎன்  15
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும;
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்  20
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!  

புறநானூறு - 203. இரவலர்க்கு உதவுக!

பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
திணை:பாடாண்
துறை:பரிசில்

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்,
முன்னும் கொண்டிர்என, நும்மனோர் மறுத்தல்  5
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்,
உள்ளி வருநர் நசையிழப் போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
ஆர்எயில் அவர்கட்கு ஆகவும்,சூநுமதுசூ எனப்  10
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன், எந்தை! நீஇரவலர் புரவே.  

புறநானூறு - 204. அதனினும் உயர்ந்தது!

பாடியவர்: கழைதின் யானையார்.
பாடப்பட்டோன்: வல் வில் ஓரி.
திணை:பாடாண்.
துறை: பரிசில்.

ஈஎன இரத்தல் இழிந்தன்று; அதன்எதிர்,
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன்எதிர்,
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்  5
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்,
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை  10
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

புறநானூறு - 205. பெட்பின்றி ஈதல் வேண்டலம்!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன்.
திணை:பாடாண்.
துறை: பரிசில்.

முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
உறுவர் செல்சார்வு ஆகிச், செறுவர்
தாளுளம் தபுத்த வாள்மிகு தானை,  5
வெள்வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்,
நோன்சிலை, வேட்டுவ! நோயிலை யாகுக!
ஆர்கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்துக்,  10
கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
நீரின்று பெயரா ஆங்குத், தேரொடு
ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
களிறின்று பெயரல, பரிசிலர் கடும்பே.

புறநானூறு - 206. எத்திசைச் செலினும் சோறே!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்:
துறை: பரிசில்.

வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!  5
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கோல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;  10
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.  

புறநானூறு - 207. வருகென வேண்டும்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பாடாண்:
துறை: பரிசில்.

எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்அழி,
அருகிற் கண்டும் அறியார் போல,
அகம்நக வாரா முகன்அழி பரிசில்
தாள்இலாளர் வேளார் அல்லர்?  5
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள்அவிந்து அடங்காது, வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி,  10
வாயா வன்கனிக்கு உலமரு வோரே.  

புறநானூறு - 208. வாணிகப் பரிசிலன் அல்லேன்!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்:
துறை: பரிசில்.

சூகுன்றும் மலையும் பலபின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்குசூ என
நின்ற என்நயந்து அருளி, சூஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்சூ என என்னை
யாங்குஅறிந் தனனோ, தாங்கரும் காவலன்?  5
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினை அனைத்து ஆயினும், இனிதுஅவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.  

புறநானூறு - 209. நல்நாட்டுப் பொருந!

பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: மூவன்.
திணை: பாடாண்:
துறை: பரிசில் கடாநிலை.

பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி, நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்திக், தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்  5
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ, அல்கு விசும்பு உகத்து.
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக், கையற்றுப்.
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்  10
நசைதர வந்து, நின்இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும! நம்முள்
குறுநணி காண்குவ தாக - நாளும்,  15
நறும்பல் ஒலிவரும் கதுப்பின், தேமொழித்,
தெரியிழை அன்ன மார்பின்,
செருவெம் சேஎய்! நின் மகிழ்இரு க்கையே!

புறநானூறு - 210. நினையாதிருத்தல் அரிது!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்:
துறை: பரிசில் கடாநிலை.

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது,
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு,
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
செயிர்தீர் கொள்கை எம்வெங் காதலி  5
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல்? இறீஇயர், என் உயிர்!சூ என
நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்  10
இடுக்கண் மனையோள் தீரிய, இந்நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக்காண்:
அவல நெஞ்சமொடு செல்வல்: நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறத்தே.  15

புறநானூறு - 211. நாணக் கூறினேன்!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை.
திணை: பாடாண்:
துறை: பரிசில் கடாநிலை.

அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந்தலை துமிய,
நின்றுகாண் பன்ன நீள்மலை மிளிரக்,
குன்றுதூவ எறியும் அரவம் போல,
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று,  5
அரைசுபடக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்குநிலைப் பரிசிலென்,
சூவள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்சூ எனக்,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
உள்ளியது முடிந்தோய் மன்ற; முன்னாள்  10
கையுள் ளதுபோல் காட்டி, வழிநாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந்நா அணங்க ஏத்திப்,
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின்  15
ஆடுகொள் வியன்மார்பு தொழுதெனன் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்,
பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து,  20
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந் தவென்வாள் நுதற் படர்ந்தே.  

புறநானூறு - 212. யாம் உம் கோமான்?

பாடியவர்: பிசிராந்தையார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்:
துறை: இயன்மொழி.

சூநுங்கோ யார்?சூ வினவின், எங்கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கின் காமம் வீடஆரா,
ஆரற் கொழுஞ்சூடு அங்கவுள் அடாஅ,
வைகுதொழின் மடியும் மடியா விழவின்  5
யாணர் நல்நாட் டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,
கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நமக்கே.  10

புறநானூறு - 213. நினையும் காலை!

பாடியவர்: புல்லாற்றூர் எயிற்றியனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: வஞ்சி:
துறை: துணை வஞ்சி.
குறிப்பு: கோப்பெருஞ்சோழன் தன் மக்கள்மேற் போருக்கு எழுந்தகாலைப் பாடிச் சந்து செய்தது.

மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்,
வெண்குடை விளக்கும், விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,  5
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு எழுந்தவர்:
நினையுங் காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி, மற்று நீ
உயர்ந்தோர் உலகம் எய்திப்; பின்னும்  10
ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே;
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்,  15
நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே?
அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்பப், பழியெஞ் சுவையே;
அதனால்,ஒழிகதில் அத்தை,நின் மறனே!வல்விரைந்து
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு  20
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால். நன்றோ வானோர்
அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே.  

புறநானூறு - 214. நல்வினையே செய்வோம்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி

சூசெய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;  5
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;  10
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,  

புறநானூறு - 215. அல்லற்காலை நில்லான்!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; பிசிராந்தையார் வருவார் என்றான்; அவர் வாரார் என்றனர் சான்றோருட் சிலர்; அவர்க்கு அவன் கூறிய செய்யுள் இது.

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்  5
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வ்க் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.  

புறநானூறு - 216. அவனுக்கும் இடம் செய்க!

பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பாடாண்
துறை: இயன்மொழி
குறிப்பு : வடக்கிருந்த சோழன், பிசிராந்தையாருக்கும் தன்னருகே இடன் ஒழிக்க என்று கூறிய செய்யுள் இது.

கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய,
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின், ஆரறி வாளிர்!  5
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
புன்பெயர் கிளக்கும் காலை, என் பெயர்
பேதைச் சோழன் என்னும், சிறந்த
காதற் கிழமையும் உடையவன்; அதன் தலை,  10
இன்னதோர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

புறநானூறு - 217. நெஞ்சம் மயங்கும்!

பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: கோப்பெருஞ் சோழன் சொன்னவாறே பிசிராந்தையார் அங்கு வந்தனர்;

அதனைக் கண்டு வியந்த பொத்தியார் பாடிய செய்யுள் இது.
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,  5
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக,
இனையதோர் காலை ஈங்கு வருதல்;
வருவன் என்ற கோனது பெருமையும்,
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்,
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;  10
அதனால், தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்? அளியது தானே!

புறநானூறு - 218. சான்றோர்சாலார் இயல்புகள்!

பாடியவர்: கண்ணகனார் நத்தத்தனார் எனவும் பாடம்.
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: பிசிராந்தையார் வடக்கிருந்தார்; அதனைக் கண்டு பாடியது.

பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்,
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து,
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை,
ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்  5
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே.  

புறநானூறு - 219. உணக்கும் மள்ளனே!

பாடியவர்: பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்,
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
புலவுதி மாதோ நீயே;
பலரால் அத்தை, நின் குறிஇருந் தோரே.  

புறநானூறு - 220. கலங்கனேன் அல்லனோ!

பாடியவர்: பொத்தியார்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: சோழன் வடக்கிருந்தான்; அவன்பாற் சென்ற பொத்தியார், அவனால் தடுக்கப்பட்டு  உறையூர்க்கு மீண்டார்; சோழன் உயிர் நீத்தான். அவனன்றி
வறி தான உறையூர் மன்றத்தைக் கண்டு இரங்கிப் பொத்தியார் பாடிய செய்யுள் இது.

பெருங்சோறு பயந்து, பல்யாண்டு புரந்த
பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்,
கலங்கினேன் அல்லனோ, யானே-பொலந்தார்த்  5
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

புறநானூறு - 221. வைகம் வாரீர்!

பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள் இது.

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;  5
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!  10
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

புறநானூறு - 222. என் இடம் யாது?

பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: தன் மகன் பிறந்தபின், சோழனது நடுகல் நின்ற இடத்திற்குச் சென்று, தாமும்

உயிர்விடத் துணிந்த பொத்தியார், எனக்கும் இடம் தா எனக்
கேட்டுப் பாடியது இச் செய்யுள்
அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி,
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என  5
என்இவண் ஒழித்த அன்பி லாள!
எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாது? மற்று இசைவெய் யோயே!

புறநானூறு - 223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!

பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

பலர்க்கு நிழ லாகி, உலகம் மீக்கூறித்,
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி,
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்,
இடங் கொடுத்து அளிப்ப, மன்ற-உடம்போடு
இன்னுயிர் விரும்பும் கிழமைத்  5
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!  

புறநானூறு - 224. இறந்தோன் அவனே!

பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்;
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி,
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து,
முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த  5
பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு,
பருதி உருவின் பல்படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந்தூண்,
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்;  10
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்
அருவி மாறி, அஞ்சுவரக் கருகிப்,
பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்,
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்,
பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்  15
கொய்துகட்டு அழித்த வேங்கையின்,
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.  

புறநானூறு - 225. வலம்புரி ஒலித்தது!

பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,
நிலமார் வையத்து வலமுறை வளைஇ,
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு,  5
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
முள்ளுடை வியன்காட் டதுவே-நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்,  10
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலைக்,
காலைத் தோன்றினும் நோகோ யானே

புறநானூறு - 226. இரந்து கொண்டிருக்கும் அது!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வின்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்று ஆகல் வேண்டும்-பொலந்தார்
மண்டமர் கடக்கும் தானைத்  5
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே.

புறநானூறு - 227. நயனில் கூற்றம்!

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,  5
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்
வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற் கொண்டனை ஆயின்,  10
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே?  

புறநானூறு - 228. ஒல்லுமோ நினக்கே!

பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப் பையுள்.

கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?  5
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்  10
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?  15

புறநானூறு - 229. மறந்தனன் கொல்லோ?

பாடியவர்: கூடலூர் கிழார்.
பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: அவன் இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் அவ்வாறே துஞ்சிய போது பாடியது.

ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
 5
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்,  10
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே:
அதுகண்டு, யாமும்,பிறரும் பல்வேறு இரவலர்,
பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்றுமன் தில்லென  15
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப,
அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்,
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்,  20
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்,
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு  25
அளந்து கொடை அறியா ஈகை,
மணிவரை அன்ன மாஅ யோனே?

புறநானூறு - 230. நீ இழந்தனையே கூற்றம்!

பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி.
திணை: பொதுவியல்.
துறை: கையுறுநிலை.

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்,
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்,
களம்மலி குப்பை காப்பில வைகவும்,
விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்,
வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்,  5
பொய்யா எழினி பொருதுகளம் சேர-
ஈன்றோர் நீத்த குழவி போலத்,
தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்,
கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகிலும், மிக நனி  10
நீ இழந் தனையே, அறனில் கூற்றம்!
வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்,
வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்,
நேரார் பல்லுயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர்அடு களத்தே.  15

புறநானூறு - 231. புகழ் மாயலவே!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

எரிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்அழல்,
குருகினும் குறுகுக; குறுகாது சென்று,
விசும்பஉற நீளினும் நீள்க: பசுங்கதிர்
திங்கள் அன்ன வெண்குடை  5
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே!  

புறநானூறு - 232. கொள்வன் கொல்லோ!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
திணை : தும்பை. துறை:பாண்பாட்டும் ஆம்.

இல்லா கியரோ, காலை மாலை!
அல்லா கியர், யான் வாழும் நாளே!
நடுகல் பீலி சூட்டி, நார்அரி
சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
கோடு உயர் பிறங்குமலை கெழீஇய  5
நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே?

புறநானூறு - 233. பொய்யாய்ப் போக!

பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!
இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண்,  5
போர்அடு தானை, எவ்வி மார்பின்
எகுஉறு விழுப்புண் பல என
வைகறு விடியல், இயம்பிய குரலே.

புறநானூறு - 234. உண்டனன் கொல்?

பாடியவர்: வெள்ளெருக்கிலையார்.
பாடப்பட்டோன்: வேள் எவ்வி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்,
தன்அமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்-
உலகுபுகத் திறந்த வாயில்  5
பலரோடு உண்டல் மரீஇ யோனே?

புறநானூறு - 235. அருநிறத்து இயங்கிய வேல்!

பாடியவர்: அவ்வையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!  5
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,  10
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?  15
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

புறநானூறு - 236. கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!

பாடியவர்: கபிலர்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை
குறிப்பு: வேள்பாரி துஞ்சியபின், அவன் மகளிரைப் பார்ப்பார்ப்படுத்து வடக்கிருந்தபோது, பாடியது.

கலைஉணக் கிழிந்த, முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
மலை கெழு நாட! மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்
புலந்தனை யாகுவை- புரந்த யாண்டே  5
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை  10
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!  

புறநானூறு - 237. சோற்றுப் பானையிலே தீ!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
(வெளிமானிடம் சென்றனர் புலவர். அவன் துஞ்ச, இளவெளிமான் சிறிது கொடுக்கின்றான். அதனைக் கொள்ளாது வெளிமான் துஞ்சியதற்கு இரங்கிப்
பாடிய செய்யுள் இது.)

நீடுவாழ்க! என்று, யான் நெடுங்கடை குறுகிப்,
பாடி நின்ற பசிநாட் கண்ணே,
கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என  5
நச்சி இருந்த நசைபழுது ஆக,
அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு,
அளியர் தாமே ஆர்க என்னா
அறன்இல் கூற்றம் திறனின்று துணிய,
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்  10
வாழைப் பூவின் வளைமுறி சிதற,
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே;
ஆங்கு அது நோயின்று ஆக, ஓங்குவரைப்  15
புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்,
எலிபார்த்து ஒற்றாது ஆகும்; மலி திரைக்
கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
எழுமதி, நெஞ்சே ! துணிபுமுந் துறுத்தே.  20

புறநானூறு - 238. தகுதியும் அதுவே!

பாடியவர்: பெருஞ்சித்திரனார்.
பாடப்பட்டோன்: இளவெளிமான்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
(வெளிமான் துஞ்சியமைக்கு வருந்திக் கூறியது இது. கரைகாண வியலாத் துயரத்தைக், கண்ணில் ஊமன் கடற் பட்டாங்கு எனக் கூறுதலைக் கவனிக்க.)

கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா,
வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
காடுமுன் னினனே, கட்கா முறுநன்;  5
தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்,
பாடுநர் கடும்பும் பையென் றனவே;
தோடுகொள் முரசும் கிழிந்தன, கண்ணே;
ஆள்இல், வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே;
வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப,  10
எந்தை ஆகுல அதற்படல் அறியேன்;
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற
என்ஆ குவர்கொல், என் துன்னி யோரே?
மாரி இரவின், மரங்கவிழ் பொழுதின்,
ஆரஞர் உற்ற நெஞ்சமொடு , ஓராங்குக்  15
கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு,
வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து,
அவல மறுசுழி மறுகலின்,
தவலே நன்றுமன் ; தகுதியும் அதுவே.  

புறநானூறு - 239. இடுக, சுடுக, எதுவும் செய்க!

பாடியவர்: பேரெயின் முறுவலார்.
பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

தொடி யுடைய தோள் மணந்தணன் ;
கடி காவிற் பூச் சூடினன் ;
தண் கமழுஞ் சாந்து நீவினன் ;
செற் றோரை வழி தபுத்தனன் ;
நட் டோரை உயர்பு கூறினன் ;  5
வலியரென, வழி மொழியலன் ;
மெலியரென, மீக் கூறலன்;
பிறரைத் தான் இரப் பறியலன் ;
இரந் தோர்க்கு மறுப் பறியலன் ;
வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்;  10
வருபடை எதிர் தாங்கினன் ;
பெயர் படை புறங் கண்டனன் ;
கடும் பரிய மாக் கடவினன் ;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன் ;
ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்;  15
தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்பப் பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்-
இடுக ஒன்றோ ! சுடுக ஒன்றோ !  20
படுவழிப் படுக, இப் புகழ்வெய்யோன் தலையே!  

புறநானூறு - 240. பிறர் நாடுபடு செலவினர்!

பாடியவர்: குட்டுவன் கீரனார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல், குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,  5
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்,
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை,
சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி,
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது;  10
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியர் ஆகிப், பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர், இனியே.  

புறநானூறு - 241. விசும்பும் ஆர்த்தது!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.

திண்தேர் இரவலர்க்கு, ஈத்த, தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன, ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்,
போர்ப்புறு முரசும் கறங்க,
ஆர்ப்புஎழுந் தன்றால், விசும்பி னானே.  5

புறநானூறு - 242. முல்லையும் பூத்தியோ?

பாடியவர்: குடவாயிற் தீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறுநிலை.
குறிப்பு: கடவாயில் நல்லாதனார் பாடியது என்பதும் பாடம்.

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்,
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை  5
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?  

புறநானூறு - 243. யாண்டு உண்டுகொல்?

பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை

இனிநினைந்து இரக்கம் ஆகின்று ; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்,
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து,
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி,
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு  5
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து,
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்,
கரையவர் மருளத், திரையகம் பிதிர,
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை  10
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ-
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே?

புறநானூறு - 244. கலைபடு துயரம் போலும்!

(பாடினோர் பாடபபட்டடோர் யாவரெனத் தெரியாதவாறு இது அழிந்தது. பாடலும் சிதைந்தே கிடைத்துள்ளன).

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .

புறநானூறு - 245. என்னிதன் பண்பே?

பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
திணை: பொதுவியல்
துறை: கையறுநிலை

யங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்?
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,  5
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ;
இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே!

புறநானூறு - 246. பொய்கையும் தீயும் ஒன்றே!

பாடியவர்: பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
திணை: பொதுவியல்
துறை: ஆனந்தப் பையுள்

பல்சான் றீரே ; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,  5
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;  10
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!  15 

புறநானூறு - 247. பேரஞர்க் கண்ணள்!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர்
திணை: பொதுவியல்
துறை: ஆனந்தப் பையுள்

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து;
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்,  5
பேரஞர்க் கண்ணள், பெருங்காடு நோக்கித்,
தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன்
முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்,
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே!  10

புறநானூறு - 248. அளிய தாமே ஆம்பல்!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்!
இளையம் ஆகத் தழையா யினவே; இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப், பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே.  5

புறநானூறு - 249. சுளகிற் சீறிடம்!

பாடியவர்: தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்.
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை
(காஞ்சித் தினைத் துறைகளுள் ஒன்றான, தாமே யேங்கிய தாங்கரும் பையுள் என்பதற்கு மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்.சூ. 24 உரை)).

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்,
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு,  5
உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று ; மன்னே! இன்றே
அடங்கிய கற்பின் ; ஆய்நுதல் மடந்தை,  10
உயர்நிலை உலகம் அவன்புக .. .. வரி
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி,
அழுதல் ஆனாக் கண்ணள்,
மெழுகு, ஆப்பிகண் கலுழ்நீ ரானே.  

புறநானூறு - 250. மனையும் மனைவியும்!

பாடியவர்: தாயங் கண்ணியார்
திணை: பொதுவியல்
துறை: தாபதநிலை

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்,
கூந்தல் கொய்து, குறுந்தொடு நீக்கி,
அல்லி உணவின் மனைவியொடு, இனியே  5
புல்என் றனையால்-வளங்கெழு திருநகர்!
வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே.

 
மேலும் புறநானூறு »
temple news
புறப்பொருள் பற்றிய நானூறு பாக்களைக் கொண்டது. இந் நூலுக்கு புறம், புறப் பாட்டு, புறம்பு நானூறு என்று ... மேலும்
 
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்! பாடியவர்:பெருந்தேவனார்.பாடப்பட்டோன்: இறைவன் கண்ணி கார்நறுங் ... மேலும்
 
புறநானூறு - 51. ஈசலும் எதிர்ந்தோரும் ! பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.பாடப்பட்டோன்: ... மேலும்
 
புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்! பாடியவர்: அவ்வையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: ... மேலும்
 
புறநானூறு - 101. பலநாளும் தலைநாளும்! பாடியவர்: அவ்வையார்,பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.திணை: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar