பதிவு செய்த நாள்
22
மார்
2013
03:03
புறநானூறு - 301. அறிந்தோர் யார்?
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்
திணை: தும்பை
துறை : தானை மறம்
பல் சான்றீரே ! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்; 5
ஒளிறு ஏந்து ,மருப்பின்நும் களிறும் போற்றுமின்!
எனைநாள் தங்கும்நும் போரே, அனைநாள்
எறியர் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே! 10
பலம் என்று இகழ்தல் ஓம்புமின்! உதுக்காண்
நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி,
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி,
எல்லிடைப் படர்தந் தோனே ; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது, 15
ஏந்துவன் போலான், தன் இலங்கிலை வேலே!
புறநானூறு - 302. வேலின் அட்ட களிறு?
பாடியவர்: வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் 5
கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
விண்ணிவர் விசும்பின் மீனும், 10
தண்பெயல் உறையும், உறையாற் றாவே.
புறநானூறு - 303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!
பாடியவர்: எருமை வெளியனார்
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை, 5
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்,
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.
புறநானூறு - 304. எம்முன் தப்பியோன்!
பாடியவர்: அரிசில்கிழார்
திணை: தும்பை
துறை : குதிரை மறம்
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு 5
நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,
புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று; 10
இரண்டா காது அவன் கூறியது எனவே.
புறநானூறு - 305. சொல்லோ சிலவே!
பாடியவர்: மதுரை வேளாசான்
திணை: வாகை
துறை : பார்ப்பன வாகை
வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி, 5
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.
புறநானூறு - 306. ஒண்ணுதல் அரிவை!
பாடியவர்: அள்ளூர் நன் முல்லையார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.
புறநானூறு - 307. யாண்டுளன் கொல்லோ!
பாடியவர்: பெயர் புலனாகவில்லை
திணை: தும்பை
துறை : களிற்றுடனிலை
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன;
கான ஊகின் கழன்றுகு முதுவீ 5
அரியல் வான்குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத், தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ; அதுகண்டு, 10
வெஞ்சின யானை வேந்தனும், இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.
புறநானூறு - 308. நாணின மடப்பிடி!
பாடியவர்: கோவூர் கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்,
மின்நேர் பச்சை, மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே; 5
வேந்துஉடன்று எறிந்த வேலே, என்னை
சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக், 10
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
புறநானூறு - 309. என்னைகண் அதுவே!
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
திணை: தும்பை
துறை : நூழிலாட்டு
இரும்புமுகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்லரா உறையும் புற்றம் போலவும்,
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்,
மாற்றருந் துப்பின் மாற்றோர், பாசறை 5
உளன் என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.
புறநானூறு - 310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார்
திணை: தும்பை
துறை : நூழிலாட்டு
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, 5
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்புசு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
புறநானூறு - 311. சால்பு உடையோனே!
பாடியவர்: அவ்வையார்
திணை: தும்பை
துறை : பாண் பாட்டு
களர்ப்படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை;
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து,
பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ , செருவத்துச்; 5
சிறப்புடைச் செங்கண் புகைய, வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
புறநானூறு - 312. காளைக்குக் கடனே!
312. காளைக்குக் கடனே!
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக், 5
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.
புறநானூறு - 313. வேண்டினும் கடவன்!
பாடியவர்: மாங்குடி மருதனார்
திணை: வாகை
துறை : வல்லான் முல்லை
அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட 5
கழிமுரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.
புறநானூறு - 314. மனைக்கு விளக்கு!
பாடியவர்: ஐயூர் முடவனார்
திணை: வாகை
துறை : வல்லான் முல்லை
மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை,
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்,
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து 5
நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானேசு தன் இறைவிழு முறினே.
புறநானூறு - 315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!
பாடியவர்: அவ்வையார். பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: வாகை.
துறை : வல்லான் முல்லை.
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்,
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் 5
கான்றுபடு கனைஎரி போலத்,
தோன்றவும் வல்லன்சு தான் தோன்றுங் காலே.
புறநானூறு - 316. சீறியாழ் பனையம்!
பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
கள்ளின் வாழ்த்திக், கள்ளின் வாழ்த்திக்,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன் எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் 5
இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது, நீயும்;
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்,
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச், 10
சென்று வாய் சிவந்துமேல் வருகசு
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.
புறநானூறு - 317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: மவேம்ப்ற்றூர்க் குமரனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும், பாய்உண்டு ஆயினும்,
யாதுண்டு ஆயினும், கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. .. 5
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும், ஈய்ந்து, துயில்ஏற் பினனே.
புறநானூறு - 318. பெடையொடு வதியும்!
பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅ யோளொடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரேசு
மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,
பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் 5
குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன்புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும்சுவேந்துவிழு முறினே.
புறநானூறு - 319. முயல் சுட்டவாயினும் தருவோம்!
பாடியவர்: ஆலங்குடி வங்கனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி,
யாம் கடு உண்டென, வறிது மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல் 5
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி 10
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின்
பாடினி மாலை யணிய,
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. 15
புறநானூறு - 320. கண்ட மனையோள்!
பாடியவர்: வீரை வெளியனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை மடப்பிணை தழீஇப், பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட, 5
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இவ்வழங் காமையின், கல்லென ஒலித்து,
மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி 10
கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாறத்
தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்,
தங்கினை சென்மோ, பாண! தங்காது, 15
வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.
புறநானூறு - 321. வன்புல வைப்பினது!
பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக், 5
கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,
வன்புல வைப்பி னதுவேசுசென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே. 10
புறநானூறு - 322. கண்படை ஈயான்!
பாடியவர்: ஆவூர்கிழார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்,
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்,
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய 5
மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது,
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்,
தண்பணை யாளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே. 10
புறநானூறு - 323. உள்ளியது சுரக்கும் ஈகை!
பாடியவர் பாடப்பட்டோர் : பெயர்கள் தெரிந்தில.
திணை: வாகை.
துறை : வல்லாண் முல்லை.
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் 5
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.
புறநானூறு - 324. உலந்துழி உலக்கும்!
பாடியவர்: ஆலத்தூர் கிழார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
ஊக நுண்கோற் செறித்த அம்பின், 5
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்,
குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
வெண்வாழ் தாய வண்காற் பந்தர், 10
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்,
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை,
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.
புறநானூறு - 325. வேந்து தலைவரினும் தாங்கம்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
திணை: வாகை
துறை : வல்லாண் முல்லை
களிறுநீ றாடிய விடுநில மருங்கின்,
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்,
குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்,
செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை, 5
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்-ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்,
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, 10
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே-வென்வேல்ஊரே.
புறநானூறு - 326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக், 5
கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே -மனைவியும்,
வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது,
படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை 10
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. 15
புறநானூறு - 327. வரகின் குப்பை!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச் 5
சிறுபுல் லாளர் முகத்தவை கூறி,
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.
புறநானூறு - 328. ஈயத் தொலைந்தன!
பாடியவர்: பெயர் தெரிந்திலது
திணை: வாகை
துறை :மூதின் முல்லை
.. .. டைமுதல் புறவு சேர்ந்திருந்த
புன்புலச் சீறூர், நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
.. .. .. .. .. .. டமைந் தனனே; 5
அன்னன் ஆயினும், பாண ! நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொட.. ..
களவுப் புளியன்ன விளை.. .. .. ..
.. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத், 10
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு, இனி திருந்த பின். .. .. ..
.. .. .. தருகுவன் மாதோ-
தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில், 15
சீறூர் மன்னனைப் பாடினை செலினே.
புறநானூறு - 329. மாப்புகை கமழும்!
பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி,
நன்னீர் ஆட்டி, நெய்ந்நறைக் கொளீஇய,
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்,
அருமுனை இருக்கைத்து ஆயினும், வரிமிடற்று 5
அரவுஉறை புற்றத்து அற்றே, நாளும்
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை,
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே.
புறநானூறு - 330. ஆழி அனையன்!
பாடியவர்: மதுரை கணக்காயனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்,
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் 5
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.
புறநானூறு - 331. இல்லது படைக்க வல்லன்!
பாடியவர்: உறையூர் முதுகூத்தனார் (உறையூர் முது கூற்றனார் எனவும் பாடம்).
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச், சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும், பனிமிகப்,
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக், குறிப்பின் 5
இல்லது படைக்கவும் வல்லன் ; உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்,
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போலச், சிற்சில்
வரிசையின் அளக்கவும் வல்லன்; உரிதினின் 10
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லன், அவன் தூவுங் காலே.
புறநானூறு - 332. வேல் பெருந்தகை உடைத்தே!
பாடியவர்: விரியூர் கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
பிறர்வேல் போலா தாகி, இவ்வூர்
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே;
இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, 5
இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்,
தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங்கடல் தானை வேந்தர்
பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. 10
புறநானூறு - 333. தங்கனிர் சென்மோ புலவீர்!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
நீருள் பட்ட மாரிப் பேருறை
மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண,
கரும்பிடர்த் தலைய, பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், 5
உண்கஎன உணரா உயவிற்று ஆயினும்,
தங்கனீர் சென்மோ, புலவீர்! நன்றும்;
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி,
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக், 10
குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்,
குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து,
சிறிது புறப்பட்டன்றோ விலளே; தன்னூர்
வேட்டக் குடிதொறுங் கூட்டு .. .. ..
.. .. .. .. உடும்பு செய் 15
பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா,
வம்பணி யானை வேந்துதலை வரினும்,
உண்பது மன்னும் அதுவே;
பரிசில் மன்னும், குருசில்கொண் டதுவே.
புறநானூறு - 334. தூவாள் தூவான்!
பாடியவர்: மதுரைத் தமிழக் கூத்தனார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
காகரு பழனக் கண்பின் அன்ன
தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்,
புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்புஒடுங் கும்மே.. .. .. .. பின்பு .. .. ..
.. .. .. .. .. .. னூரே மனையோள் 5
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊணொலி அரவமொடு கைதூ வாளே;
உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
பொலம் .. .. .. .. .. .. .. ப்
பரிசில் பரிசிலர்க்கு ஈய, 10
உரவேற் காளையும் கைதூ வானே.
புறநானூறு - 335. கடவுள் இலவே!
பாடியவர்: மாங்குடி கிழார்
திணை: வாகை
துறை : மூதின் முல்லை
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு 5
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக், 10
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
புறநானூறு - 336. பண்பில் தாயே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை: பாற் பாற் காஞ்சி
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; 5
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் 10
தகைவளர்த்து எடுத்த நகையொடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.
புறநானூறு - 337. இவர் மறனும் இற்று!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,
வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.
வரலதோறு அகம் மலர . .. .. .. ..
ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப் 5
பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,
காண்டற்கு அரியளாகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணென
அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய 10
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.
அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,
காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி, 15
வருத லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா குவர்கொல் தாமே - நேரிழை 20
உருத்த பல்சுணங்கு அணிந்த
மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?
புறநானூறு - 338. ஓரெயின் மன்னன் மகள்!
பாடியவர்: குன்றூர் கிழார் மகனார்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
சிறப்பு: நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப்பட்டினத்தைப் பற்றிய குறிப்பு.
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின்,
நெல் மலிந்த மனைப், பொன் மலிந்த மறுகின்,
படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்,
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன,
பெருஞ்சீர் அருங்கொண் டியளே ; கருஞ்சினை 5
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர்,
கொற்ற வேந்தர் தரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்- வண் தோட்டுப்
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று 10
உணங்குகலன் ஆழியின் தோன்றும்
ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே!
புறநானூறு - 339. வளரவேண்டும் அவளே!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; 5
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தற் பூக் குறூஉந்து;
பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
.. .. .. .. .. . . ..லத்தி 10
வளர வேண்டும், அவளே, என்றும்-
ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி,
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.
புறநானூறு - 340. அணித்தழை நுடங்க!
பாடியவர்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
அணித்தழை நுடங்க ஓடி, மணிப்பொறிக்
குரலம் குன்றி கொள்ளும் இளையோள்,
மாமகள் .. .. .. .. .. ..
.. .. .. ..லென வினவுதி, கேள், நீ
எடுப்பவெ .. .. .. .. .. .. .. 5
.. .. .. .. .. மைந்தர் தந்தை
இரும்பனை அன்ன பெருங்கை யானை
கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தனனே.
புறநானூறு - 341. இழப்பது கொல்லோ பெருங்கவின்!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
வேந்துகுறை யுறவுங் கொடாஅன், ஏந்துகோட்டு
அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்,
செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும் 5
.. .. .. . .. .. ... .. .. .. ..
புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
பூக்கோள் என ஏஎய்க், கயம்புக் கனனே;
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்,
சுணங்கணி வனமுலை, அவளொடு நாளை 10
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ-
ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்,
நீள்இலை எகம் மறுத்த உடம்பொடு
வாரா உலகம் புகுதல் ஒன்று- எனப்
படைதொட் டனனே, குருசில்; ஆயிடைக் 15
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்,
பெருங்கவின் இழப்பது கொல்லோ,
மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே!
புறநானூறு - 342. வாள்தக உழக்கும் மாட்சியர்!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்? என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;
திருநயத் தக்க பண்பின் இவள் நலனே 5
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
கூர்நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், 10
தன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅ மையின் பேரமர் செய்தலின்,
கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,
வாள்தக வைகலும் உழக்கும்
மாட்சி யவர் இவள் தன்னை மாரே. 15
புறநானூறு - 343. ஏணி வருந்தின்று!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை யம்பியின் மனைமறுக் குந்து!
மனைக் கவைஇய கறிமூ டையால்.
கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
கலந் தந்த பொற் பரிசம் 5
கழித் தொணியான் கரைசேர்க் குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன, 10
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரையர் அல்லோர் வரையலள், இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் சு வந்தோர்,
வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானேசுபருந்துஉயிர்த்து 15
இடைமதில் சேக்கும் புரிசைப்
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே?
புறநானூறு - 344. இரண்டினுள் ஒன்று!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார்
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர், பறந்தெழுந்து,
துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;
புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, 5
பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;
இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-
கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.
புறநானூறு - 345. பன்னல் வேலிப் பணை நல்லூர்!
பாடியவர்: அடைநெடுங் கல்வியார்
பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)
களிறு அணைப்பக் கலங்கின, காஅ;
தேர்ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலங் கழாஅலின், துறை கலக்குற்றன;
தெறல் மறவர் இறை கூர்தலின், 5
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்,
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை, 10
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னை மாரே
செல்வம் வேண்டார், செருப்புகல் வேண்டி,
நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்;
கழிப்பிணிப் பலகையர், கதுவாய் வாளர், 15
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்ன மறவர்த் தாயினும், அன்னோ !
என்னா வதுகொல் தானே-
பன்னல் வேலிஇப் பணைநல் லூரே! 20
புறநானூறு - 346. பாழ் செய்யும் இவள் நலினே!
பாடியவர்: அண்டர் மகன் குறுவழுதி
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
பிற .. .. .. ள பால் என மடுத்தலின்,
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்;
கல்வியென் என்னும், வல்லாண் சிறாஅன்;
ஒள்வேல் நல்லன், அதுவாய் ஆகுதல்சு
அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் 5
பேணுநர்ப் பெறாஅது விளியும்
புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.
புறநானூறு - 347. வேர் துளங்கின மரனே!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் பறேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை 5
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
. . . . . . . . . . . . . .
என்னா வதுகொல் தானே? . .. . .
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர் 10
வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
புறநானூறு - 348. பெருந்துறை மரனே!
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்,
கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்,
கள்ளரிக்கும் குயம், சிறுசின்
மீன் சீவும் பாண் சேரி,
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, 5
குவளை உண்கண் இவளைத், தாயே
ஈனா ளாயினள் ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும்,
செந்நுதல் யானை பிணிப்ப,
வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே. 10
புறநானூறு - 349. ஊர்க்கு அணங்காயினள்!
பாடியவர்: மதுரை மருதனிள நாகனார்
திணை: காஞ்சி
துறை : மகட்பாற் காஞ்சி
நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே;
இதுஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று,
அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, 5
மரம்படு சிறுதீப் போல,
அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.
புறநானூறு - 350. வாயிற் கொட்குவர் மாதோ!
பாடியவர்: மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
திணை: காஞ்சி
துறை: மகட்பாற் காஞ்சி
தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில்,
சிதைந்த இஞ்சிக், கதுவாய் மூதூர்
யாங்கா வதுகொல் தானே, தாங்காது?
படுமழை உருமின் இறங்கு முரசின்
கடுமான் வேந்தர் காலை வந்து, எம் 5
நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ;
பொருதாது அமருவர் அல்லர்; போர் உழந்து
அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடிவேல் எகின் சிவந்த உண்கண்,
தொடியுறழ் முன்கை, இளையோள் 10
அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே.