பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கொடிமரத்தில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, அடுத்த மாதம் 15ல் துவங்கி 25 வரை நடக்கிறது. திருவிழாவை அறிவிக்க, கொடிமரத்தில் கொடியேற்றப்படுவது மரபாக உள்ளது. அக்கொடிமரத்தில் துளை ஏற்பட்டு, பழுதடைந்து காணப்படுகிறது. திருவிழாவுக்குள் கொடிமரத்தை சீரமைத்து, புதுப்பிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நகர இந்து முன்னணி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், 2008 ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தபோது, பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, புதிதாக நிறுவப்பட்டது. ஆனால், அடுத்த இரு ஆண்டில் கொடிமரம் சாய்ந்தது.
கோவில் நிர்வாகத்தினர் சீரமைத்தனர்.இருந்தாலும், கொடி மரம் மீண்டும் சாய்ந்துள்ளது. கீழ்ப்பகுதியில் உள்ள பித்தளை தகட்டில் பெரிய துளை ஏற்பட்டுள்ளது. கோவிலில் கொடிமரம் முக்கியத்துவம் வாய்ந்தது என இந்து ஆகம விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கொடிமரத்தை நேராக்கி, மிக மோசமான நிலையிலுள்ள அதன் தோற்றத்தை பொலிவாக மாற்ற வேண்டும். அடுத்த மாதம், தேர்த்திருவிழா வருவதால், கொடியேற்றத்துக்குள், இப்பணியை மேற்கொள்ள வேண்டும், என்றார். செயல் அலுவலர் வெற்றிச்செல்வனிடம் கேட்டதற்கு, ""கும்பாபிஷேகத்தின்போது, ஆகம விதிகள் அடிப்படையில் நிறுவப்பட்டது; கொடிமரம் நேராகத்தான் உள்ளது. பொறுத்தப்பட்ட பித்தளை தகடுகள் சாய்ந்துள்ளன. வரும், ஏப்., மாதம் திருவிழா நடைபெற உள்ளதால், அதற்குள் கொடிமரத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.