பதிவு செய்த நாள்
23
மார்
2013
10:03
சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில், 26ம் தேதி நடக்கும் குண்டம் விழாவுக்காக குண்டம் அருகே கரும்பு (விறகு) சேகரிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இக்கோவிலின் முக்கிய பண்டிகையான குண்டம் விழா, வரும், 26ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு நடக்கிறது. கடந்த, 11ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. இதையடுத்து, பண்ணாரி மாரியம்மன் கடந்த, 13ம் தேதி முதல் சிக்கரசம்பாளையத்தில் வீதியுலா துவங்கி கடந்த செவ்வாய்கிழமை இரவு பண்ணாரி மாரியம்மன் கோவிலை அடைந்தது. பின் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினமும் இரவு கோவில் வளாகத்தில் மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை மற்றும் பீனாட்சி வாத்திய இசைகளுடன் கம்பத்தை சுற்றி அம்மன் புகழ்பாடும் கழியாட்டம் நடக்கிறது. வரும், 25ம் தேதி இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியில் தெப்பகுளம் சென்று பூக்கூடையுடன் அம்மை அழைத்து வந்து, 26ம் தேதி அதிகாலை நான்கு மணிக்கு கோவில் முன் அமைத்துள்ள குண்டத்தில், தலைமை பூசாரி சேகர் தீ மிதித்து குண்டம் இறங்குதலை துவக்கி வைப்பார். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்வர். இந்த குண்டத்துக்கு தீ மூட்ட ஊஞ்சல் மரம் மற்றும் வேம்பு மரங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக பக்தர்கள் காணிக்கையாக மரங்கள் கொண்டு வந்து, குண்டம் அருகே வைத்துவிட்டு செல்வார்கள். கடந்த ஆண்டை காட்டிலும் கரும்பு என்று அழைக்கப்படும் விறகுகள் காணிக்கையாக பக்தர்கள் அதிகமாக அளித்துள்ளனர். தற்போது குண்டம் விழா பணிகள் வேகமாக நடந்து வருகிறது. கோவிலை சுற்றிலும் பந்தல் அமைத்து, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் பண்ணாரி மாரியம்மன் கோவிலை சுற்றிலும் கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.